Published : 20 Jan 2021 03:49 PM
Last Updated : 20 Jan 2021 03:49 PM

சித்திரைத் திருவிழா தெப்ப உற்சவத்திற்கு சிக்கல்: வேகமாகக் குறையும் மதுரை தெப்பக்குளம் தண்ணீர்- வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் நிரப்ப எதிர்பார்ப்பு

மதுரை

மதுரையில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகுப் போக்குவரத்து தொடங்கி முக்கிய பொழுதுபோக்கு மையமாக மாறிவரும் சூழலில் தற்போது தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது.

விரைவில் சித்திரைத் திருவிழாவின் தெப்ப உற்சவம் நடக்கும் என்பதால் வைகை ஆற்றுத் தண்ணீரை தெப்பக்குளத்தில் நிரப்ப வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் வண்டியூர் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளக்கரையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

மன்னர் திருமலை நாயக்கர், மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார். தற்போது அதுவே மதுரையின் முக்கிய பொழுதுப்போக்கு அம்சமாக மாறியுள்ளது.

இந்த தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் ஒரு விநாயகர் கோயிலும் உள்ளது. 17 ஏக்கரில் அமைந்துள்ள இந்த குளத்தில் 6 மீட்டர் உயரத்தில் 50 கோடி லிட்டர் தண்ணீர் தேக்கலாம். கடந்த கால்நூற்றாண்டிற்கு மேலாக தண்ணீர் வராமல் வறட்சிக்கு இலக்காகி சிறுவர்கள் விளையாட்டு மைதானமாக மாறியது.

கடந்த ஆண்டு வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு ஸ்மார்ட் சிட்டி மூலம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

ஆனால், வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தெப்பக்குளத்திற்கு வரும்வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டில் 6 முறை தெப்பக்குளம் நிரம்பியதால் தற்போது மீனாட்சியம்ன் கோயில் நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் படகு சவாரி தொடங்கியுள்ளது. அதனால், மகிழ்ச்சியடைந்த மதுரை மக்கள் குழந்தைகளுடன் படகுசவாரி செல்வதற்கு குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்திரைத்திருவிழா நெருங்கும்நிலையில் கடல் போல் தண்ணீர் நிரம்பி காணப்பட்ட தெப்பக்குளத்தில் வேகமாக தண்ணீர் குறைந்து வருகிறது. மீனாட்சியம்மன் கோயில் சித்திரை விழாவில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நடக்கும் தெப்ப உற்சவம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆனால், தற்போது தண்ணீர் வேகமாக குறைவதைப்பார்க்கும்போது வழக்கம்போல் தெப்ப உற்சவம் நிலை தெப்பமாக நடக்குமோ? என்ற கவலை பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதனால், வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளத்தை நிரப்ப மாநகராட்சி நிர்வாகமும், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த காலத்தில் இயல்பாக மழை தண்ணீர் தெப்பக்குளத்திற்கு வந்தது. ஆனால், தற்போது வைகை ஆற்று தண்ணீர் மட்டுமே தெப்பக்குளத்திற்கு வருவதற்கு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மழை தண்ணீர் வருவதற்கு மாநகராட்சியும், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தெப்பக்குளம் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமாக இருந்தாலும் கோயில் நிர்வாகம் தெப்பக்குளத்தை பராமரிக்க எந்த முயற்சியும் செய்வதாக தெரியவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x