Last Updated : 20 Jan, 2021 03:14 PM

 

Published : 20 Jan 2021 03:14 PM
Last Updated : 20 Jan 2021 03:14 PM

12 கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தாகூர் அரசு கல்லூரி முதல்வர் கவன ஈர்ப்பு போராட்டம்

புதுச்சேரி தாகூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, மாணவர்களுக்கு வகுப்பறை, ஆய்வகம், கழிவறை வசதி உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கல்லூரியின் முதல்வர் சசிகாந்த தாஸ் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளில் மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ள மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப வகுப்பறை, இருக்கைகள் கழிப்பறை, கணினி ஆய்வகம், கலையரங்கம், விளையாட்டு வசதி, உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

மாணவர்களின் மனநலனை பாதுகாக்க அனைத்து கல்லூரிகளிலும் மனநல ஆலோசகர்களை பணியமர்த்த வேண்டும். கல்லூரி பராமரிப்பு பணிக்கான தொகையினை உயர்த்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் கல்லூரி பேராசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய நிலுவைகள் உடனடியாக வழங்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் 2018ம் ஆண்டு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கல்லூரிகளில் பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின்படி பேராசிரியர் பணியிடங்களை தகுதியான இணை பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டும். காலியாக இருக்கும் அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தாகூர் கலைக்கல்லூரியில் உள்ள தாகூர் சிலை முன்பு இன்று(ஜன 20) அக்கல்லூரியின் முதல்வர் சசிகாந்த தாஸ் அமர்ந்து அறவழியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x