

தமிழ்நாட்டில் கள் இறக்கவும், பருகவும் உள்ள தடையை நீக்காவிட்டால், 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்ததுபோல் வரும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலிலும் நெருக்கடி கொடுப்போம் என்றார் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
"தமிழ்நாட்டில் கள் இறக்கவும், பருகவும் தடை உள்ளது. இந்தத் தடையை நீக்குவதற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு கள் இயக்கம் போராடி வருகிறது. ஆனால், இந்தக் கோரிக்கைக்கு அரசோ, அரசியல் கட்சிகளோ செவி சாய்க்கவில்லை.
எனவே, கள் இறக்க அனுமதி கோரி சென்னை சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து தெற் கூவம் ஆற்றுச் சாலை வரை நாளை (ஜன.21) அஸ்வமேத யாத்திரை நடத்தப்படும்.
அஸ்வமேத யாத்திரையை தடுக்கும் வகையில், கள்ளும் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள்தான் என்று நிரூபிப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும். தமிழ்நாடு கள் இயக்கமும் கலைக்கப்படும். இதை தமிழ்நாடு கள் இயக்கம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அரசுக்கும் சவாலாகக் கூறுகிறது. இந்த சவாலை கள் இயக்கம் ஏற்கெனவே பலமுறை அறிவித்தும் இதுவரை யாரும் நிரூபிக்க முன்வரவில்லை.
கள் இறக்கவும், பருகவும் யார் ஆதரவு அளிக்கின்றனரோ அந்தக் கட்சிக்கே 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்போம். எதிராக இருப்பவர்களைத் தோற்கடிப்போம்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால், 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் 1,033 வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை நிறுத்தியபோதுபோல், வரும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலிலும் நெருக்கடி கொடுப்போம்" என்றார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள்,விவசாயிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயம், விளைப் பொருட்களைச் சந்தைப்படுத்துதல் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கும் நோக்கில் வேளாண் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கமும், அதற்கான புதிய வலைத்தளமும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விவசாயிகள் இல.கதிரேசன், கே.சி.பழனிசாமி, மகாதானபுரம் ராஜாராம், வழக்கறிஞர் கவிதா காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.