Published : 20 Jan 2021 02:37 PM
Last Updated : 20 Jan 2021 02:37 PM

திமுக அதிக இடங்களில் போட்டி? கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பிரச்சினை உள்ளதா?- ஸ்டாலின் பேட்டி

சென்னை

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தோழமைக் கட்சி முன்வரும்போது அதனை வழங்குவது எங்கள் கடமை. இது நட்பின் அடிப்படையிலானது. நாங்கள் நிர்பந்திக்கிறோம் என்பது எல்லாம் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் செய்யும் சதி என ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி:

தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தொகுதிப் பங்கீட்டை நடத்துமா? ஏனெனில் 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுகவால் தனிப்பட்ட முறையில் அறுதிப் பெரும்பான்மை பெறமுடியவில்லை அல்லவா?

திமுக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. ஒருமித்த எண்ணங்கள் அடிப்படையிலான கூட்டணி. கொள்கை சார்ந்த கூட்டணி. கொள்கை அடிப்படையில் இதயங்களால் இணைந்துள்ளோம். இணக்கமாகவே இருக்கிறோம். 'திமுக ஆட்சி அமைய வேண்டும்' என்ற பொதுநோக்கோடு கூட்டணிக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

கூட்டணிப் பேச்சுவார்த்தையைப் பொறுத்தமட்டில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்களுக்கான பேச்சுவார்த்தை உரிய நேரத்தில் தொடங்கும். சுமுகமான தொகுதிப் பங்கீடு நடக்கும். தேர்தல் அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருங்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் சில தோழமைக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. தற்போது அவை தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வெற்றி வாய்ப்பு கருதி கூட்டணிக் கட்சிகளில் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முன்வந்தன. அது திமுகவின் நிர்பந்தத்தால் நடைபெற்ற நிகழ்வு அல்ல.

அண்ணா தலைமையில் நடந்த தேர்தலின்போதே சில கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளன. மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரு சின்னத்தில் போட்டியிட தோழமைக் கட்சி முன்வரும்போது அதனை வழங்குவது எங்கள் கடமை. இது நட்பின் அடிப்படையிலானது. இதில் நாங்கள் நிர்பந்திக்கிறோம் என்பது எல்லாம் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் செய்யும் சதிகள். அதற்கு ஊடகங்கள் பலியாக வேண்டாம்.

கூட்டணியில் மாற்றம் வருமா? அதிமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளதா?

திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக-தெளிவாக இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிறகு, அதிமுக கூட்டணி என்று ஒன்று இருக்குமா என்பதை முதலில் பாருங்கள்.

உங்கள் மகனும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? அதே நேரத்தில் அவரது நுழைவு குடும்ப அரசியலை ஊக்குவிப்பதாகக் குற்றச்சாட்டை எழுப்புமல்லவா?

கட்சித் தோழர்கள் குடும்பம் குடும்பமாக, தலைமுறை தலைமுறையாக, கட்சிக்காக உழைப்பதை எப்படி குடும்ப அரசியல் என்று கூற முடியும்? திமுக தோழர் ஒருவர் கட்சிக்காக உழைப்பது எப்படி குடும்ப அரசியல் இல்லையோ - அதேபோல் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்காக- ஊழல் அதிமுக ஆட்சியை எதிர்த்து - தமிழகத்தில் திமுகவின் நல்லாட்சி அமைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக மக்களின் நலனுக்காக பிரச்சாரம் செய்கிறார். அவர் கலைஞரின் பேரன் என்பதால், அவரது ஆர்வமும், பிரச்சாரமும் இயல்பானவைதானே.

நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுகவிற்கும் - திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதைத்தான் இப்போதும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி செய்து கொண்டிருக்கிறார். போகின்ற இடங்களில் எல்லாம் அவர் பிரச்சாரத்திற்கு மக்களின் பேராதரவு கிடைக்கிறது என்பதை ஊடகங்கள் மூலமாக நீங்கள் அறியலாம்.

திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படித்தான் வாய்ப்பினைப் பெற்றேன். கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் அப்படி உழைத்துத்தான் கட்சியில் முன்னேறியிருக்கிறார்கள். இதில் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று பேசுவது எல்லாம் எதையாவது சொல்லி திமுகவை எப்போதும் குறை சொல்பவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.

திமுகவைப் பொறுத்தவரை அமைப்புரீதியாக பலமான கட்சி. மாவட்டச் செயலாளர்கள் அரசியல் சூழலை நன்கு அறிந்தவர்கள். அப்படிப்பட்ட நிலையில் பிரசாந்த் கிஷோர் போன்றவர்களின் ஆலோசனையை நாட வேண்டிய அவசியம் என்ன?

காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள்- ஏன் இங்குள்ள அதிமுக கூட இதுபோன்று ஆலோசகர்களை வைத்திருப்பதை பத்திரிகைகள் விமர்சிப்பதில்லை. தேர்தல்களில் இப்போது சமூக வலைதளங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நவீன தொழில் நுட்பங்களில் கட்சியினரை வழிநடத்தவே இந்த ஆலோசனையே தவிர - வேறு எதற்காகவும் இல்லை. இது உயர் தொழில் நுட்ப யுகம் என்பதை மறுத்துவிட முடியாது.

எந்தத் தேர்தலையும், எத்தகைய எதிரியையும் சந்தித்து வெற்றி பெறும் தனித் திறமையும் ஆளுமையும் திமுகவிற்கும் உண்டு. திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும் உண்டு. அதில் எங்கள் கட்சியின் தேர்தல் பணிகளை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த பெரியவர் பக்தவத்சலம் போன்றோரே பாராட்டி இருக்கிறார்கள். எந்தச் சூழலிலும் கொள்கை ஒன்றே வெல்லும் ஆயுதம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதது திமுக.

சமரசமற்ற கொள்கையும் - சதா காலமும் மக்கள் சேவையும்தான் திமுகவுக்குத் தமிழகத்தில் கிடைத்துள்ள செல்வாக்குக்குக் காரணம். திமுக அரசு, தமிழர் அரசாக, தமிழின மேம்பாட்டு அரசாக, தமிழ்நாட்டின் மேன்மைக்கு பாடுபடும் அரசாக அமையும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். அத்தகைய நல்லரசை அமைக்க நாட்டு மக்கள் தயாராகிவிட்டார்கள்.

மாநிலத்தை வளப்படுத்த - மத்தியில் உரிமைக்கு போராட திமுகவால் தான் முடியும் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். பத்து ஆண்டு கால அதல பாதாள வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி அந்த இடத்தில் வளர்ச்சியை நிர்மாணிக்க திமுகவினால்தான் முடியும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.

இன்னும் நான்கே மாதங்கள் உள்ளன. அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையான விடையை மக்களே சொல்வார்கள். மக்கள் குரலே மகேசன் குரல் - என்பது தாங்கள் அறியாதது அல்ல.

திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?

இதற்குரிய பதிலை திமுக வெளியிடப் போகும் தேர்தல் அறிக்கையில் காணுங்கள். அதை முன் கூட்டியே சொல்வது முறையாக இருக்காது.

இவ்வாறு ஸ்டாலின் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x