

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் இங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அந்தவகையில், நிகழாண்டிலும் ஜன.15-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, ஜன.15-ம் தேதி முதல் ஜன.30-ம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ள அனுமதி அளித்து ஜன.13-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், திருச்சி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக இருந்ததால், வழக்கம்போல் ஜன.15-ம் தேதி ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு விழாக் குமுவினர், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஆலோசனை நடத்தி, ஜன.20-ம் தேதி ஜல்லிக்கட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் என்.விசுவநாதன் தலைமையில் அரசு அலுவலர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தனர்.
தொடர்ந்து, இன்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் என்.விசுவநாதன் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார்.
அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.
முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க தலா 75 பேர் வீதம் மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடுவதற்காக 500க்கும் அதிகமான காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. இந்தக் காளைகளைக் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதேபோல், மாடுபிடி வீரர்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
இதுவரை மாடுபிடி வீரர்கள் 10 பேர் லேசான காயமடைந்துள்ளனர். மாலை 3 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைகிறது. ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஏராளமான மக்கள் ஜல்லிக்கட்டைக் கண்டு ரசித்து வருகின்றனர்.