Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: புதுச்சேரி திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் விளக்கம்

காரைக்கால்

“புதுச்சேரியில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்றி திமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்பதுதான் அர்த்தம்” என்று மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார்.

காரைக்கால் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியது: புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என புதுச்சேரியில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று, திமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தான் அர்த்தம். யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். புதுச்சேரியில் திமுக தலைமையில் ஏற்கெனவே 4 முறை ஆட்சி அமைந்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக இருண்ட ஆட்சிதான் நடைபெற்றுள்ளது. புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் எதுவுமில்லை. பல தொழிற்சாலைகள், நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் திமுக தலைமையிடம் உள்ளது. வரும் தேர்தலில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கூட்டணியில் யார் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், திமுக போட்டியிடுவதாக நினைத்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x