

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை, காவல் துறையானது 23 காவல் நிலையங்கள், 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுடன் செயல்படுகிறது. ஆள் மாயம் பிரிவின் கீழ் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆண்டுதோறும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் காணாமல்போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ‘மிஸ்ஸிங் பெர்சன் ட்ரேசிங் டீம்' எனப்படும்காணாமல்போன நபர்களை கண்டுபிடிக்கும் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறும். இதில் பல வழக்குகள், ஆண்டுகள் கடந்தும் கண்டுபிடிக்க இயலாமல் போவதும் உண்டு.
இந்நிலையில், பல்லடம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவலராக பணிபுரிபவர் பாலமுருகன். கடந்த 2020-ம் ஆண்டில் பல்லடம் காவல் நிலையத்தில் ஆள்மாயம் பிரிவின் கீழ் பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோர் காணாமல்போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 50 வழக்குகள் பாலமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டன. தன்னிடம் அளிக்கப்பட்ட 50 வழக்குகளில், 43 வழக்குகளில் காணாமல்போனவர்களை கண்டுபிடித்துள்ளார். பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் வசம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் காணாமல்போனவர்களை அதிகமாக கண்டுபிடித்த பெருமைமுதுநிலை காவலர் பாலமுருகனுக்கு கிடைத்துள்ளது. இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், பாலமுருகனை நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டியுள்ளார். சமூக ஊடகங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்' நாளிதழ் செய்தியாளரிடம் பாலமுருகன் கூறும்போது, "காணாமல் போனவர்களை தேடிகேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். காவல் நிலையங்களுக்கு பெரும்பாலும் இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் காணாமல்போன வழக்குகளே வரும். பிள்ளைகளை காணாமல் தவிக்கும் பெற்றோரின் மனநிலையை புரிந்துகொண்டு, விரைவாக அவர்களை கண்டுபி டிக்க செயல்படுவோம்.
ஏற்கெனவே குற்றப் பிரிவில் பணிபுரிந்துள்ளதால், காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பது எனக்கு சற்று எளிதாக உள்ளது. சில வழக்குகளின் அனுபவங்களை மறக்க இயலாது. அவற்றில் ஏற்படும் அனுபவங்களே அதற்கு காரணம். கடந்த ஆண்டில் 17 வயது சிறுமி, 18 வயதுடைய இளம்பெண் ஆகியோரை கண்டுபிடிக்க, கேரளா சென்றது மறக்க முடியாத அனுபவம். பிற வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எனது பணியை காவல் கண்காணிப்பாளர் பாராட்டியது ஊக்கமளிப்பதாக உள்ளது" என்றார்.