Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் 12 ஆயிரம் பேரை நிரந்தரமாக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை

சென்னை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன், கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேற்று நேரில் வழங்கினர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக என்.யூ.எல்.எம். திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென்று பணிநீக்கம் செய்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் அனைவரும் சீன அதிபர் வருகை, வார்தா, நிவர் புயல்கள், கரோனா பேரிடர் போன்ற பல்வேறு நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் தூய்மைப் பணியாற்றியவர்கள். அதுமட்டுமின்றி இவர்களில் 90 சதவீதம் பேர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பணிநீக்கம் செய்திருப்பது நல்ல நிர்வாக நடைமுறை அல்ல. இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் திறம்பட ஆற்றிய பணி ஆகியவற்றை கருதி 12 ஆயிரம் பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்கின் முடிவுக்காக காத்திருக்காமல் அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x