

பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படைக் காவலர்கள் 2 பேர், அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் (34) அண்ணணூரில் தங்கி இருந்தார். இவரது நண்பர் ரவீந்திரன் (32) ஆவடியில் தங்கி இருந்தார். சென்னை ஆயுதப்படை காவலர்களான இருவருக்கும் கோயம்பேட்டில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று அதிகாலை இருவரும் சீருடையில் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை 4 மணியளவில் அம்பத்தூர், எஸ்டேட் ரோடு, டிஏவி பள்ளி, முகப்பேர் கிழக்கு பகுதியில் வலதுபுறம் வளைவில் திரும்பியபோது எதிர் திசையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் (பிஎம்டபிள்யூ) இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 காவலர்களில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் சென்று, பலத்த காயம் அடைந்து உயிரிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக்கை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திக் உயிரிழந்தார். ரவீந்திரன் சடலத்தை மீட்ட போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்ததாக அம்பத்தூரை சேர்ந்த அமர்நாத் (25) என்ற பொறியியல் மாணவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ``காரில் இருந்த கார் உரிமையாளரும், 3-ம் ஆண்டு கல்லூரி மாணவருமான நொளம்பூரை சேர்ந்த வருண் சேகர் (20), மற்றொரு 3-ம் ஆண்டு கல்லூரி மாணவரான கே.கே.நகர் ரோகித் சூர்யா (21) ஆகியோரையும் பிடித்து விசாரித்து வருகிறோம். ரோகித் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வருண் சேகர் வீட்டுக்கு சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து விசாரிக்கிறோம்'' என்றனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.