Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: புதுச்சேரி மாநிலத்தில் 10 லட்சம் வாக்காளர்கள்

புதுச்சேரி

புதுச்சேரி மாநில இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மொத்தம் 10 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுக்கிணங்க 1.1.2021-ஐ தகுதி நாளாகக் கொண்டு புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பரப்பில் அடங்கிய 30 சட்டப்பேரவை தொகுதிகளின் 2021-ம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணி கடந்த 16.11.2020 முதல் கடந்த 15.12.2020 வரை நடைபெற்றது.

இந்த சுருக்குமுறை திருத்தபணியின்போது வாக்காளரிட மிருந்து பெறப்பட்ட உரிமை கோரிக்கைகளையும், ஆட்சேபனை களையும், அவற்றின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பற்றிய விவரங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அதன்படி கடந்த 16.12.2019 வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஆண்கள் - 4,58,989, பெண்கள் - 5,15,660, மூன்றாம் பாலினம் - 105 என மொத்தம் 9,74,754 வாக்காளர்கள் இருந்தனர்.

பெயர் சேர்ப்பதற்காக ஆண்கள் - 18,468, பெண்கள் - 21,080, மூன்றாம் பாலினத்தவர் - 14 என மொத்தம் 39,562 பேரிடம் விண்ணப்ப படிவம் பெறப்பட்டு அனைவரது விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஆண்கள் - 4,737, பெண்கள் - 5,894, மூன்றாம் பாலினம்4 என மொத்தம் 10,635 பேரிடம்படிவங்கள் பெறப்பட்டு அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதுச்சேரி - 7,73,378, காரைக்கால் - 1,61,464, மாஹே - 31,092, ஏனாம் - 37,747 என மொத்தம் 10,03,681வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் வில்லியனூர் தொகுதியில் அதிகபட்சமாக 42,329வாக்காளர்களும், குறைந்த பட்சமாக உருளையன்பேட்டை தொகுதியில் 24,723 வாக்காளர் களும் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் 7 நாட்களுக்கு (பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

தொடர் திருத்தம்

புதிதாக பதிவு செய்த 18 - 19 வயது நிரம்பிய வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்காமல் விடுபட்ட நபர்கள் தங்களின் பெயரை தொடர் திருத்தத்தில் 20.1.2021 முதல் வேட்புமனு தாக்கலின் இறுதி நாள் வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி, வாக்காளர் பதிவு அதிகாரியை தொடர்பு கொண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுமக்கள் தங்களின் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை குறுஞ்செய்தி மூலமாகவும் அறியலாம். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x