கரோனா பாதிப்பு: அமைச்சர் காமராஜுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ். இவருக்குக் கடந்த 5-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பூரணமாக குணமாகாத நிலையில் பொங்கலுக்கு முன்னதாக வீட்டுக்குச் சென்ற அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உறவினர்கள் விருப்பத்தின் பேரில் இன்று மதியம் அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், சற்றுமுன் அவர் அங்கிருந்து சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டபோது, “கரோனா தொற்றால் அமைச்சர் காமராஜின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவும் குறைந்துள்ளது. நுரையீரல் செயல்பாட்டுக்காக அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அவர் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் ட்வீட்
திமுக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காமராஜ் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
