Last Updated : 19 Jan, 2021 08:25 PM

 

Published : 19 Jan 2021 08:25 PM
Last Updated : 19 Jan 2021 08:25 PM

காரைக்குடியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கு விற்பனை: வரத்து குறைந்ததால் மீண்டும் விலை ஏற்றம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கு விற்பனையானது. மேலும், விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், தேனி, பெரம்பலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தவிர கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வெங்காயம் வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெளிமாநிலங்களில் பெய்த தொடர் மழை காரணமாக வெங்காய வரத்து குறைந்தது. தமிழகத்திலும் வறட்சியால் வெங்காய சாகுபடி குறைந்தது.

இதனால் கிலோ ரூ.200 வரை சின்ன வெங்காயம் விற்பனையானது. இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் வெங்காய வரத்து அதிகரித்து, விலை குறைந்தது. இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.40 ஆக விலை குறைந்தது.

இதையடுத்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது. இந்நிலையில் தமிழகத்தில் அறுவடை சமயத்தில் பெய்த தொடர் மழையால் வெங்காயம் அழுகியது. இதனால் வரத்து குறைந்து மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. காரைக்குடி தினசரி சந்தையில் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. மேலும் சின்ன வெங்காயம் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x