

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தற்போது சாத்தியமில்லாதது என்று தெரிந்தும் தேர்தல் பேரத்துக்காகவும், பேர வலிமையைக் கூட்டுவதற்காகவும், தன்னை நம்பியுள்ள சமுதாயத்தை வெளிப்படையாக ராமதாஸ் ஏமாற்றி வருகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று (செவ்வாய்க்கிழமை) வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
‘‘மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததுடன் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இதில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவானவர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள டிராக்டர் பேரணியால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும்.
மாநிலங்களின் அதிகாரங்கள் பட்டியலில் வேளாண்மை உள்ளது. எனவே, தமிழகத்தில் குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மோடியின் விருப்பத்துக்கு ஏற்ப தமிழகத்தில் எடப்பாடி அரசு ஒரு பொம்மலாட்ட அரசாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முடிவுற்ற, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்திருப்பது கூட்டணி அரசியலை உறுதிப்படுத்தவே என்பதாக ஊகிக்க முடிகிறது. தமிழகத்தை சனாதன சக்தியிடம் ஒப்படைக்க சிவப்புக் கம்பளம் விரிக்கும் விதத்தில் அதிமுக செயல்படுகிறது. இது அவர்கள் நம்புகின்ற எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பேசிக்கொள்கிறார்கள். அதிமுகவில் உள்ள சில தலைவர்களும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசத் தொடங்கிவிட்டனர். நாங்கள் இன்னமும் திமுக கூட்டணியில்தான் உள்ளோம். அதே நிலை தொடரும்.
கரோனா தடுப்பூசி மூன்றுகட்ட சோதனைக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால், கோவேக்ஸின் தடுப்பூசி 3-வது கட்டப் பரிசோதனைக்கு முன்னதாகவே மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்துக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி அரசு செயல்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. தற்போது இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை நன்கு தெரிந்தும் ராமதாஸ், தேர்தல் பேரத்துக்காவும், பேர வலிமையைக் கூட்டுவதற்காகவும், அவரை நம்பி இருக்கின்ற சமுதாயத்தை ஏமாற்றி வருகிறார். தன்னை நம்பும் சமூகத்திற்கே மிகப்பெரிய துரோகம் செய்யும் வகையில் காய்களை நகர்துகிறார் ராமதாஸ்.
ஏற்கெனவே 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் இருவரும் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’’.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.