எம்.ஜி.ஆரின் பெயரைச் சொன்னால்தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டிருக்கிறார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

எம்.ஜி.ஆரின் பெயரைச் சொன்னால்தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டிருக்கிறார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Updated on
1 min read

எம்.ஜி.ஆரின் பெயரைச் சொன்னால்தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டிருக்கிறார் என்பது ஊரறிந்த உண்மை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

இதுகுறித்து கயத்தாறு அருகே கடம்பூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டமான 248 கிராம குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தத் திட்டத்தை பிப்ரவரி மாதத்தில் தமிழக முதல்வர் நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளார். குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர் மேலாண்மையில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் என்ற நிலையை அடைந்துள்ளது.

இதேபோல், 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இவையெல்லாம் மக்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நினைத்தோம். தற்போது 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றால் அதில் ஆச்சரியமில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது என்ற நிலைப்பாட்டை நாங்கள் தெரிவித்துள்ளோம். போகிற போக்கைப் பார்த்தால் திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் எங்களுடன் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எம்.ஜி.ஆரை இழிவாகப் பேசிய திமுகவினரின் வாயாலே எம்.ஜி.ஆரின் ரசிகன். அவரது பக்தன் என்றெல்லாம் என்று சொல்லக்கூடிய சூழல் வந்துள்ளது என்றால், எம்.ஜி.ஆரின் ஆன்மா அவர்களுக்குப் பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லாமல் தமிழகத்தில் எவரும் அரசியல் நடத்த முடியாது என்ற நிலை உள்ளது.

நாங்கள்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சொன்னால்தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டிருக்கிறார் என்பது ஊரறிந்த உண்மை”.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in