

கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியங்களில் 1,746 பயனாளிகளுக்குக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான ஊரகப் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் மூலம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சிகளில் 4,800 பயனாளிகளுக்கு (ஒரு பயனாளிக்கு 25 கோழிக் குஞ்சுகள் வீதம்) ரூ.95.48 லட்சத்தில் கோழிக் குஞ்சுகள் வழங்க அரசு நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் தொடக்கமாக இன்று கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட சிதம்பராபுரம், அச்சங்குளம், கே.துரைச்சாமிபுரம், வெங்கடேஸ்வரபுரம், இடைசெவல், சத்திரப்பட்டி கிராமங்களில் ரூ.34.65 லட்சத்தில் 1,746 பயனாளிகளுக்கு 43,650 அசில் இன கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, பயனாளிகளுக்குக் கோழிக் குஞ்சுகளை வழங்கிப் பேசினார்.
முன்னதாக, கடம்பூர் அருகே சிதம்பராபுரம் ரூ.13 லட்சத்தில் ஜெ.ஜெ.எம். திட்டத்தில் வீடுகளுக்குக் குடிநீர் குழாய் வழங்கும் பணிகள், ரூ.64 லட்சத்தில் சிமென்ட் சாலை பணிகள், பேவர் பிளாக் பணிகள், வாறுகால் அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.17 லட்சத்தில் குடிநீர் கிணறு தோண்டும் பணிகளை அடிக்கல் நாட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதேபோல், சிதம்பராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் சிறு குடிநீர்த் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கும் பணிகளையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் மா.சம்பத், உதவி இயக்குநர் வீ.சங்கரநாராயணன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கஸ்தூரி, மாவட்டக் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கணேச பாண்டியன், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.