தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது: கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது: கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
Updated on
1 min read

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை. பாஜகவின் பினாமி ஆட்சி தான் நடந்து வருகிறது என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி. கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறார்.

கன்னியாகுமரியில் இன்று கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையைப் பார்வையிடுவதற்காக அவர் படகில் சென்றார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறுகையில், "தமிழக அரசு வெற்றி நடைபோடுகிறது என்ற பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் செய்து வருகின்றனர். எதில் தமிழக அரசு வெற்றிநடை போடுகிறது என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பயனுள்ள திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதே நேரம் மக்களின் கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்து வருகின்றனர். முதியோர் உதவித்தொகை முறையாக வினியோகம் செய்யவில்லை.

டெல்லியில் கேட்டுக் கொண்டு தான் அனைத்து முடிவையும் தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை. பாஜகவின் பினாமி ஆட்சி தான் நடந்து வருகிறது.

திமுக ஆட்சியின்போது கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை, தற்போதைய அதிமுக ஆட்சியில் பராமரிப்பற்ற நிலையில் காணப்படுகிறது. இரவு நேரத்தில் சிலையின் மின்விளக்கு எரியாத நிலை உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் திருவள்ளுவர் மீண்டும் மின்னொளியில் ஜொலிப்பார்" என்றார்.

திருவள்ளுவர் சிலையை பார்வையிடச் செல்வதற்காக கன்னியாகுமரி படகு இல்லத்திற்கு வந்த கனிமொழி எம்.பி. அங்கு படகு பயணம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த சுற்றுலாப் பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பல பெண்கள்
செல்பி எடுத்துகொண்டனர். பின்னர் காமராஜர் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்ட அவர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in