

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஜன.28-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதையட்டி, இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜை நடந்தது.
இதையடுத்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு திருவிழா கொடியேற்றி மஹா தீபாராதனை நடந்தது.
மேலும், கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கும், சோமாஸ் கந்தர், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை செல்லக்கண்ணு பட்டர், மூர்த்தி பட்டர் செய்தனர். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முதல் நேற்று இரவு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி விதியுலா வந்தார். விழா நாட்களில் பூத வாகனம், அன்னம், வெள்ளியானை, வெள்ளி மயில், காளை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
ஜன.25-ம் தேதி மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சமாக வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாக வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 26-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பச்சை மலர் சூடி சுவாமி திருமால் அம்சமாக கிரிவலமாக வீதி உலா வருகிறார்.
10-ம் திருநாளான 28-ம் தேதி காலை 6 மணிக்கு சுவாமி சட்ட ரதத்திலும், ஸ்ரீவிநாயகப் பெருமாள் கோ ரதத்திலும் எழுந்தருளுகின்றனர். காலை 9 மணிக்கு மேல் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கோயில் தலைமைக் கணக்கர் செண்பகராஜ், பரமசிவன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்கின்றனர்.