Published : 19 Jan 2021 03:18 PM
Last Updated : 19 Jan 2021 03:18 PM

சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியும்: ஸ்டாலின் 

சென்னை

சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப்போகிறது. இந்த நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. சசிகலா பிரச்சினை பற்றிப் பேசத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார் என்று ஸ்டாலின் பேசினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''எப்போதும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள்தான் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவார்கள். பல்வேறு அராஜகங்கள் நடைபெற்றன. அக்கிரமம் நடைபெற்றது. கலவரத்தை ஏற்படுத்தினார்கள். வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் பல்வேறு அட்டூழியங்களைச் செய்தார்கள். அதன்பிறகு வாக்கு எண்ணும் இடத்தில் கலவரம் செய்தார்கள். வெற்றி பெற்றவர்களைத் தோல்வியுற்றர்களாக அறிவித்தார்கள். தோல்வியுற்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்தார்கள்.

அவ்வளவு அக்கிரமத்தையும் மீறி, நாம் கிட்டத்தட்ட 70% இடங்களில் பெரிய வெற்றியை உள்ளாட்சித் தேர்தலில் பெற்றோம். அதற்கெல்லாம் காரணம், ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்தான். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்குக் காரணமும் இந்த கிராம சபைக் கூட்டம்தான்.

இப்போது சொல்கிறேன், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கு அடையாளம்தான் இந்தக் கூட்டம். இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு நீங்கள் ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். அமைதியாக, கட்டுப்பாட்டோடு நீங்கள் இருக்கின்ற காட்சியைப் பார்க்கின்றபோது நிச்சயமாக நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

2016ஆம் ஆண்டு தேர்தலில் அமைச்சர் தங்கமணி, மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு, பொதுமக்களிடம் வாக்குறுதிகள் தந்தார். நான் வெற்றி பெற்றால், நிச்சயமாக, உறுதியாக இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காண்பேன் என்று உறுதி தந்தார்.

அவர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் ஆனார். 5 ஆண்டுகள் ஆயின. அதற்காக எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை என்பதை தயவுசெய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் வெற்றி பெற்றால் ஓராண்டிற்குள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பேன், இல்லை எனில் என் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்வேன் என்று சொன்னார். அவர் அமைக்கவும் இல்லை, ராஜினாமாவும் செய்யவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

டாஸ்மாக் கடைகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சொல்லி இருக்கிறீர்கள். இந்த மதுபானக் கடைகளைப் படிப்படியாகக் குறைப்பேன் என்று சொன்னார்கள். ஆனால், இந்த ஆட்சியில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்த ஆட்சியில் இங்கு இருக்கக்கூடிய அமைச்சர் தங்கமணிதான் அதற்கான துறையைக் கையில் வைத்திருக்கிறார். ஆனால், அவர் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவருக்கு கமிஷன் வந்துவிடுகிறது. எவ்வளவு அதிகமாக விற்கிறதோ, அந்த அளவிற்கு அவருக்கு லாபம். அதனால்தான் அவர் கண்டும் காணாமல் இருக்கிறார் என்பதுதான் உண்மை.

மேம்பாலத்தைப் பற்றிப் பேசினீர்கள். ஒரு நம்பர் லாட்டரி பற்றிப் பேசினீர்கள். அருந்ததியினர் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு சகோதரி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வரலாற்றில் பதிவாகி இருக்கக்கூடிய ஒரு செய்தியைச் சொன்னார்கள்.

உங்கள் ஆட்சிக் காலத்தில்தான் உள் ஒதுக்கீடு 3% கொடுத்தீர்கள். அதனால்தான் இன்றைக்கு நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த மாணவ - மாணவியர்கள் எல்லாம் இன்று படித்துவிட்டு மருத்துவர்களாக, பொறியாளர்களாக வர முடிகிறது. மேற்படிப்புக்குச் செல்ல முடிகிறது என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்கள்.

கரும்பு விவசாயத்தைப் பற்றிச் சொன்னீர்கள். திமுக ஆட்சியில் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது? இதையெல்லாம் நீங்கள் உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

இறுதியாகப் பேசியவர் கூறியது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தச் சகோதரியின் குடும்பத்திற்கு எனது ஆறுதலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நீட் பிரச்சினையினால், அரியலூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அனிதா என்ற ஒரு மாணவி முதன் முதலில் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து பலர் இதுவரை இந்த நீட் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர்.

பள்ளிக்கூடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும். இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்ற சூழல் வந்துவிட்டது. அதை அடைய முடியாத மாணவ மாணவியர்கள் வேதனைக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டு இறக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்சியில் நீட் தேர்வைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்படவில்லை, அதனால் நான் இப்பொழுது சொல்கிறேன். நிச்சயமாக உங்கள் நம்பிக்கையோடு திமுக ஆட்சிக்கு வரப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்சிக்கு வந்தபிறகு, நிச்சயம் நீட் ஒழிப்பிற்காகப் போராடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இப்படிப் பல பிரச்சினைகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறீர்கள். உதாரணமாக இங்கு தொகுதியில் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கமணி என்பவர் ஒரு மூத்த அரசியல்வாதி. சட்டப்பேரவையில் நல்லபடியாகப் பேசுவார்.

வேலுமணி, தங்கமணி இவர்கள் இருவரைப் போல இந்த ஆட்சியில் கொள்ளை அடித்தவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேலுமணி கொள்ளை அடிப்பது வெளியில் தெரிந்துவிடும். இவர் எதையும் வெளியில் தெரியாமல் செய்வார். “வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போல” பேசுவார்.

காற்றாலை மின்சார ஊழல், தனியாரிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ததில் ஊழல், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்தது, மின்வாரியத்திற்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் என்று இப்படிப் பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி உட்பட சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம், ஆதாரங்களோடு, ஊழல் புகார்ப் பட்டியலை ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.

கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 மாதம் ஆகிறது. இது தவறு என்றால் எங்கள் மீது அவர்கள் வழக்குப் போட்டு இருக்கலாம். ஸ்டாலின் சொல்வது, திமுக சொல்வது அனைத்தும் தவறு. எனவே நாங்கள் வழக்குப் போடுகிறோம் என்று சொல்லி வழக்குப் போட்டிருக்கலாம். இதுவரைக்கும் அவர்கள் வழக்குப் போடவில்லை.

ஏன் வழக்குப் போடவில்லை? ஆகவே தவறு நடந்திருக்கிறது. இது எல்லாம் உண்மை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதில் முக்கியமாகச் சொல்ல வேண்டுமென்றால் தரமற்ற நிலக்கரி வாங்கியதில், போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று நான் சொல்லி இருக்கிறேன்.

தங்கமணி தமிழகம் ‘மின் மிகை’ மாநிலமாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இது பொய் மட்டுமல்ல; ஆகாய அளவிற்கான பொய். தன்னுடைய தவறு எல்லாம் வெளியே வரக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அம்மா படத்தை பாக்கெட்டில் வைத்து விடுகிறார்கள். எங்கு கூட்டத்திற்குச் சென்றாலும் மேடையில் அம்மா படத்தை வைத்து விடுகிறார்கள். அம்மா பெயரில் தான் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த அம்மா எப்படி இறந்தார் என்பது இன்னும் வெளிவரவில்லை.

அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்கள் கவலை எல்லாம் கரெப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன். இதுதான் கொள்கையாக அவர்களுக்கு இருந்துகொண்டிருக்கிறது. இதுதான் லட்சியமாக இருந்துகொண்டிருக்கிறது.

இன்னும் 4 மாதம்தான் இருக்கப் போகிறோம். இருக்கின்ற வரையில் அடித்துக் கொண்டு சென்றுவிடலாம். இருக்கும்வரை சுருட்டிக் கொண்டு சென்றுவிடலாம் என்று திட்டமிட்டு இன்றைக்கு எதைப் பற்றியும் கவலைப்படாமல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் 3 வேளாண் சட்டங்கள் அதை எதிர்த்து 55 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் எல்லாம் கடும் குளிரில், கொட்டும் மழையில், கூடாரம் அமைத்துக்கொண்டு, குடும்பத்தோடு உட்கார்ந்து, அங்கேயே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு கொடுமை அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

அதைத் தட்டிக்கேட்க முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது. அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு இல்லை. எல்லா மாநில அரசுகளும் அதை எதிர்க்கின்றன. ஆனால், எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய இந்த மாநில அரசு அதை ஆதரிக்கிறது. இன்று கூட எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றுள்ளார். மோடி மற்றும் அமித் ஷாவைப் பார்த்திருக்கிறார்.

விவசாயப் பிரச்சினைக்காகவா? நீட் பிரச்சினைக்காகவா? சசிகலா விடுதலையாகி வெளியே வரப் போகிறார். அவர் வந்துவிட்டார் என்றால் ஆபத்து வந்துவிடும். அந்த ஆபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்.

நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், நாம் 4 மாதம் கூடப் பொறுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப்போகிறது என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் தான் இன்றைக்கு இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு வெற்றி உறுதியாகி இருக்கிறது.

அந்த வெற்றிக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும். நிச்சயமாக நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எவ்வளவோ பிரச்சினைகளைப் பற்றிச் சொன்னீர்கள். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். இந்த ஸ்டாலின் இருக்கிறான். நான் பார்த்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x