

விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் இன்று காலை தொடங்கின.
கரோனா தொற்று அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
இந்நிலையில் கரோனா தொற்று குறையத் தொடங்கியதான் 10 மாதங்கள் தான் இன்று முதல் தமிழகத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 388 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு பயிலும் 28,710 மாணவ, மாணவிகளுக்கும், 12 ஆம் வகுப்பு பயிலும் 23,153 மாணவ மாணவிகளுக்கும் இன்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 25 மாணவ மாணவிகள் மட்டுமே அமர வைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வகுப்புகள் நடைபெறுவதை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேரில் பார்வையிட்டு அரசு அறிவுறுத்தி உள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.