Published : 19 Jan 2021 12:04 PM
Last Updated : 19 Jan 2021 12:04 PM

மனித குலத்தில் பிறந்த மரகதமணி; மருத்துவர் சாந்தா போன்ற ஒருவரை உலகத்தில் காண்பது அரிது: ஸ்டாலின் இரங்கல் 

சென்னை

டாக்டர் சாந்தாவைப் போல் இன்னொருவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே காண்பது அரிது. தனது மருத்துவப் படிப்பை முடித்தவுடன் 12 படுக்கைகள் மற்றும் ஒரேயொரு கட்டிடத்துடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்த அவர், மூன்று ஆண்டுகள் சம்பளமே பெறாமல் தன்னலமற்ற சேவை ஆற்றியவர் என திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சாந்தா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி:

“சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும், புகழ் பெற்ற மருத்துவருமான டாக்டர் வி.சாந்தா திடீரென மறைவெய்தினார் என்ற அதிர்ச்சியான செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் டாக்டர் சாந்தாவைப் போல் இன்னொருவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே காண்பது அரிது. தனது மருத்துவப் படிப்பை முடித்தவுடன் 12 படுக்கைகள் மற்றும் ஒரேயொரு கட்டிடத்துடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்த அவர், மூன்று ஆண்டுகள் சம்பளமே பெறாமல் தன்னலமற்ற சேவை ஆற்றியவர்.

உலகெங்கும் வாழ்வோருக்குப் புற்றுநோய் சிகிச்சையளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி - அம்மருத்துவமனையில் கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மிகுந்த சேவையாற்றியவர். அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும் டாக்டர் சாந்தாவின் புகழ் பாடும். மருத்துவமனையிலேயே தனது வாழ்க்கை முழுவதையும் கழித்த ஒரு மருத்துவர் இன்றைக்கு நம்மை விட்டுப் பிரிந்திருப்பதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் குடும்பத்திலிருந்து வந்த டாக்டர் சாந்தா ஏழை எளியவர்களும், நடுத்தர மக்களும் - ஏன், அனைத்துத் தரப்பு மக்களும் தரமான புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்கு தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவர் மீது தலைவர் கருணாநிதி தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததை நானறிவேன். உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள “சுகாதார ஆலோசனைக் குழுவின்” உறுப்பினராகப் பணியாற்றியவர்.

உலகின் எந்த மூலையில் புற்றுநோய்க்குப் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் - அதை உடனே இங்கே கொண்டு வந்து ஏழை எளியவர்களுக்காகப் பணியாற்றியவர். இவரது ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைகளைப் பாராட்டி மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மனித குலத்தில் பிறந்த மரகதமணி போன்ற மருத்துவர் ஒருவரை- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களை அன்புடன் கவனித்துக் குணமாக்கிய மனித நேயக் காவலரை இன்றைக்கு மருத்துவத் துறை இழந்திருப்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வில் சாதனை படைத்த டாக்டர் சாந்தாவை இழந்து வாடும் அடையாறு மருத்துவமனையின் சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் - மருத்துவ உலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x