

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் டாக்டர் சாந்தா மறைவை எண்ணி வருந்துகிறேன், உயர்தர புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ததற்கான சிறந்த முயற்சிக்காக அவர் என்றென்றும் நினைவுக்கூரப்படுவார் என பிரதமர் மோடி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையின் தலைவரும், உலகின் பல விருதுகளை பெற்றவரும், இந்தியாவின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மருத்துவத்துறையின் ரமோன் மகசேசே விருது பெற்ற புகழ்பெற்ற மருத்துவர் சாந்தா(93) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். 65 ஆண்டுகாலம் புற்றுநோய்க்கெதிரான மருத்துவ சிகிச்சையில் ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றி வந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் பதிவு வருமாறு:
"உயர்தர புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சிறந்த முயற்சிகளுக்காக டாக்டர் வி. சாந்தா என்றென்றும் நினைவுக்கூரப்படுவார். சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018-ம் ஆண்டு நான் அங்கு சென்றதை நினைத்துப்பார்க்கிறேன். மருத்துவர் சாந்தாவின் மறைவை எண்ணி வருந்துகிறேன். ஓம் சாந்தி".
என்று அவர் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.