

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.வி.ராமன் குடும்பத்தில் பிறந்த, வாழ்நாள் முழுவதும் கேன்சர் நோயாளிகளுக்காக மருத்துவம் செய்து வந்த, மருத்துவ சேவைக்காக உயரிய விருது, இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் சாந்தா காலமானார்.
பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் சாந்தா (93), உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலையில் காலமானார். டாக்டர் சாந்தா 65 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராகப் பணியாற்றியவர்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையையும் டாக்டர் சாந்தாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நோயாளிகளுக்காக மட்டுமே தன் சிந்தனை உழைப்பைச் செலுத்தியவர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பணியில் இந்திய அளவில் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோரின் புகழ்பெற்ற குடும்பத்தில் மார்ச் 11, 1927-ல் பிறந்தவர் சாந்தா. புற்றுநோயியல் துறையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர். சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. அதற்கு முழு முதற்காரணமாக விளங்கியவர் டாக்டர் சாந்தா.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 1955-ம் ஆண்டு ரெசிடெண்ட் அதிகாரியாகப் பணியில் இணைந்த அவர் 65 ஆண்டுகாலம் அம்மருத்துவமனைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து புற்றுநோய் பாதித்த ஏழை எளிய மக்களுக்குச் சிகிச்சை அளிக்கவும், அத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.
இந்தியா முழுவதுமிருந்து இங்கு சிகிச்சைக்காக நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். புற்றுநோய் நிறுவனத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் தங்கி, எளிமையாக வாழ்க்கை நடத்தி மிகப்பெரும் புற்றுநோய் மையத்தை இயக்கி வந்தவர். இந்தியாவில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் தரமான மற்றும் மலிவு விலையில் புற்றுநோய் சிகிச்சையை மேற்கொள்ளும்படி செய்தவர்.
புற்றுநோய் நோயாளிகளைப் பராமரிப்பதற்கும், நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கும் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். தனது இறுதிக் காலம் வரை, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நவீன சிகிச்சைகளை அளிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். பல கிராமங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சோதனைகள் செய்யப்படுவதற்கு முயற்சி எடுத்தவர்.
இவரது அயராத பணி காரணமாக தேசிய மற்றும் சர்வதேச சுகாதாரக் குழுக்களில் இவர் பணியாற்றியுள்ளார். உலக அளவில் இவர் எழுதாத பத்திரிகைகளே இல்லை எனும் அளவுக்கு கேன்சர் குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளார். பல்வேறு நாடுகளின் குழுக்களில் இடம்பெற்றவர். இவரது சேவைக்காக பல்வேறு நாடுகள், இந்திய அளவில், உலக அளவில் உயரிய விருதுகளைப் பெற்றவர்.
புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது ஒன்றே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட டாக்டர் சாந்தாவுக்கு 1986ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை அளித்து கவுரவித்தது. 1997ஆம் ஆண்டு கேன்சர் கட்டுப்படுத்துவதில் முன்னோடியான இவருக்கு ஐஏஆர்சி விருது கிடைத்தது. 2002-ம் ஆண்டு ப்ரஸ்ஸலில் மவ்லானா விருதும், 2005-ம் ஆண்டு மருத்துவத்துறையில் சிறப்பான பணிக்காக உயரிய விருதான ரமோன் மகசேசே விருதும் அளிக்கப்பட்டது.
2006-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு தமிழக அரசால் அவ்வையார் விருது அளிக்கப்பட்டது. இது தவிர பல்வேறு நாடுகளில், பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்குப் பல விருதுகளை அளித்துள்ளன.
வயோதிகம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை காலமானார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவர் முதன்முதலில் பணியில் இணைந்த பழைய அடையாறு மருத்துவமனையில் வைக்கப்பட உள்ளது. அங்கு அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
புற்றுநோய் மருத்துவ நிபுணரான டாக்டர் சாந்தாவின் மறைவு அத்துறைக்கே பேரிழப்பு. தனது வாழ்நாள் முழுவதும் தான் எடுத்துக்கொண்ட பணியில் மேலும் மேலும் ஆராய்ச்சிகள், விழிப்புணர்வுகள் ஏற்படக் காரணமாக இருந்த டாக்டர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.