

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறைச்சிக் கடைகளில் இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட கோழி உள்ளிட்ட பறவைகளின் இறைச்சியை விற்கக் கூடாது என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சில மாநிலங்களில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறைச்சிக் கடைகளில் கோழி கூண்டுகளை நுகர்வோர் தொடாதவாறு தூரத்தில் வைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைக்கக் கூடாது. கோழிகள் அடைத்து வைத்த கூண்டுகளை தினமும் 2முறை கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கண்டிப்பாக தலைக்கவசம், முகக்கவசம் மற்றும்கையுறைகளை அணிய வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். இறைச்சியுடன் தொடர்புடைய கத்தி போன்றவற்றை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமிநீக்கம் செய்ய வேண்டும். பறவைகளின் எச்சம் மற்றும் கழிவுகளை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரேநேரத்தில் 3-க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறந்தால்,இறைச்சிக் கடை உரிமையாளர்கள் அதுகுறித்து உடனடியாகமாநகராட்சி தொடர்புடைய சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கவேண்டும். இறந்த பறவைகள் அல்லது நோய் வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக் காரணம்கொண்டும் விற்கக் கூடாது.
இறந்த பறவைகள் மீதுசுண்ணாம்பு மற்றும் கிருமி நாசினிதெளித்து முறையாக குழி தோண்டிபுதைக்க வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறும் கடைகள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.