Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பியதால் சென்னை, புறநகர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் மக்கள் அவதி

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பியோரின் வாகனங்களால் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலம் பணிகளை விரைந்து முடித்தால் மட்டுமே நெரிசலை தவிர்க்க முடியும் என போலீஸார் தெரிவித்தனர். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று திரும்பியதால் சென்னை மற்றும் புறநகர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து பல லட்சம் பேர் கடந்த வாரம் ரயில்கள், பேருந்துகள் மற்றும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். பண்டிகை முடிந்துள்ள நிலையில், அவர்கள் சென்னைக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். நேற்று திங்கள்கிழமை என்பதால் அதிக அளவிலான மக்கள் சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் அதிகமான வாகனங்கள் சென்னை புறநகர் சாலைகளில் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, சென்னை நுழைவுப் பகுதியான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளிலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் பகுதியிலும், பூந்தமல்லி பகுதியிலும் வாகனங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்து வந்ததால், அவை மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால், நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. நேரம் ஆக ஆக, ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி, வடபழனி நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சாலைகள், எல்லை சாலை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிகள் முடியும்போது போக்குவரத்து நெரிசல் குறையும்’’ என்றனர்.

புறநகர் மின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடு அமலில் இருப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் சிலர் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்கள் நேற்று காலை முதல் சென்னைக்கு அதிகஅளவில் வரத் தொடங்கினர். பெருங்களத்தூரில் இருந்து மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரே நேரத்தில் மக்கள் அதிக அளவில் கூடியதால், மாநகரப் பேருந்துகள் உடனுக்குடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கரோனா தொற்று காரணமாக, புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க நேரக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதனால்,காலை 7.30 மணிக்கு மேல் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கவில்லை. நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருந்தால் பலரும் மின்சார ரயில்களில் பயணம் செய்திருப்பார்கள். சாலை நெரிசல்களை தவிர்த்திருக்கலாம்.

இதேபோல, விரைவு ரயில்களில் சென்ட்ரல், எழும்பூருக்கு வருபவர்களும் நேரக் கட்டுபாட்டால் அவதிப்படுகின்றனர். எனவே, புறநகர் மின்சார ரயில்களில் இருக்கும் நேரக் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x