

வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிஅளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிகளில் நீராடினர்.
தென்காசி மாவட்டத்தில் 2 வார காலமாக தொடர் மழை பெய்தது. சிலஇடங்களில் கன மழை பெய்தது.இதனால் அணைகள், குளங்களுக்குநீர் வரத்து அதிகரித்தது. அடவிநயினார் அணை தவிர இம்மாவட்டத்தில் உள்ள மற்ற 4 அணைகளும் முழுமையாக நிரம்பிவிட்டன. தொடர் மழையால் கடந்த 12-ம் தேதி குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க 13-ம் தேதி முதல் 17-ம்தேதி வரை தடை விதித்து தென்காசிமாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், தடை நீக்கப்பட்டு நேற்று முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.
அணைகளில் நீர்மட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலையில் பாபநாசம் அணைப்பகுதியில்- 3 மி.மீ., சேர் வலாறு அணைப்பகுதியில்- 2 ,ராதாபுரத்தில் 4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் நேற்று காலையில் 142.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,407கனஅடி தண்ணீர் வந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 118 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,830 கனஅடி தண்ணீர் வந்தது.
பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 3,308 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 1,165 கனஅடியுமாக மொத்தம் 4,473 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
வடக்குபச்சையாறு அணை, நம்பியாறு அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 39 அடியாக இருந்தது.