Published : 19 Jan 2021 06:58 AM
Last Updated : 19 Jan 2021 06:58 AM

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை: கூட்டணியை உறுதி செய்ததுடன், அமமுக இணைப்பு குறித்தும் பேசியதாக தகவல்

டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு சந்தித்துப் பேசி னார். அப்போது, அதிமுக - பாஜக கூட் டணியை உறுதி செய்ததுடன், சசிகலா விடுதலை, அமமுக இணைப்பு தொடர்பாக வும் பேசியதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக நடந்து வருகின்றன. திமுகவை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலின்போது அமைந்த கூட்டணியே இப்போதும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட் டணியில் பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் இருப்பதாக கூறப்பட்டாலும், அக்கட்சிகள் இன்னும் உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன.

அண்மையில் சென்னையில் நடந்த அரசு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அந்த விழாவில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வதாக அமித்ஷா முன்னிலையில் முதல்வர் பழனி சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்தனர். இருப்பினும், கூட்டணி குறித்த உறுதியான அறிவிப்பை பாஜக தேசிய தலைமை இன்னும் வெளி யிடவில்லை. மேலும், கூட்டணியின் முதல் வர் வேட்பாளராக பழனிசாமியை இது வரை பாஜக தரப்பு உறுதியாக அறிவிக்க
வில்லை. அதேநேரம் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. இதனால், கூட்டணியை முன்கூட்டியே உறுதி செய்வது அதிமுக வுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி 2 நாள் பயணமாக நேற்று பகல் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலர் கே.சண்முகம் ஆகியோரும் சென்றுள்ளார். டெல்லியில் முதல்வரை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் எம்.பி.க்கள் வரவேற்றனர்.

பிரதமர் மோடியை சந்தித்து தமிழக திட்டங்களுக்கான நிதியை பெற அரசு முறை பயணமாக முதல்வர் செல்வதாக கூறப்பட்டாலும், தேர்தல் நேரம் என்பதால் அரசியல் குறித்தும் பேசப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், நேற்றிரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார். முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றிருந்தார். 8.40 வரை ஒரு மணி நேரத்துக்கும்மேல் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது, ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் பாதிப்புக்கான தற்காலிக நிவாரணம் மற்றும் நிரந்தர கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிவாரணம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அப்போது அவர்கள் பேசியதாகவும் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவிடம் 28 முதல் 30 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும், இதுதவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து கணிசமான இடங்களை பாஜகவே பெற்று பிரித்துக் கொடுக்க உள்ளதாகவும் செய்திகள் வந்தன.

தற்போது அமித் ஷாவுடனான சந்திப்பி ன்போது கூட்டணி தலைமை, முதல்வர் வேட்பாளர், பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. மேலும், வரும் 27-ம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை யாகிறார். அவரது வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக, கணிசமான வாக்குகளை பிரித்ததையும் அதிமுக கருத்தில் கொண்டு உள்ளது. ஏற்கெனவே சசிகலா விடுதலை தொடர் பாக பாஜக பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் மூலம் பாஜக தலைமையிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசி வருவதாக கூறப்பட் டது. இந்நிலையில், அதிமுக வாக்கு களையும் அமமுக பிரிப்பதால், திமுகவை தோற்கடிக்க சட்டப்பேரவை தேர்தலுக் கான அதிமுக கூட்டணியில் அமமுகவை யும் சேர்க்க பாஜக விரும்புகிறது. இதுகுறித்தும் முதல்வர் பழனிசாமி யிடம் அமித் ஷா பேசியதாக கூறப்படு கிறது.

பாஜகவின் விருப்பத்தை அதிமுக ஏற்குமா என்பது சசிகலா விடுதலை உள்ளிட்ட அடுத்தடுத்த நிகழ்வுகளின் போது தெரியவரும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று சந்திப்பு

டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தமிழகத்துக்கு தேவையான நிதியை கோர உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. கோதாவரி - காவிரி இணைப்பு, காவிரி - குண்டாறு இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி உள்ளிட்ட நீர்வளத் திட்டங்களுக்கு அனுமதியையும், அதற்கான நிதியையும் மத்திய அரசிடம் தமிழகம் ஏற்கெனவே கோரியுள்ளது. அத்துடன் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு அனுமதியும், நிதியும் கோரப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழகத்துக்கு பல்வேறு துறைகளின்கீழ் வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.19 ஆயிரம் கோடி, கரோனா கட்டுப்பாட்டுக்கான ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஆகியவற்றை வழங்கும்படி தமிழக அரசு கோரி வருகிறது. இவை குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் வலியுறுத்துவார் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x