

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 2 மாதம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமஜெயம் கொலை செய்யப் பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின் றனர். ராமஜெயம் கொலை செய்யப் பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை.
இதனால், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அவரது மனைவி லதா உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். குற்றவாளி களைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியது. இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி போலீஸாருக்கு 3 மாத அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி எஸ்.பி. அன்பு நேரில் ஆஜராகி, ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை தொடர்பான ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையைப் படித்த நீதிபதிகள், ‘சிபிசிஐடி போலீஸார் அறிக்கையில் ராமஜெயம் கொலை தொடர்பாக பல தகவல் களைக் கூறியுள்ளனர். அந்தத் தகவல்களை வெளியில் சொல்ல முடியாது. விசாரணையில் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரி கிறது. மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளனர். அதற்குள் குற்ற வாளிகளைப் பிடித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். அதை யேற்று சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் அவகாசம் வழங்கலாமா? அல்லது சிபிஐக்கு மாற்ற வேண் டுமா என ராமஜெயத்தின் மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் கேட்டனர்.
அதற்கு, ‘சிபிசிஐடி போலீஸார் மீது எங்களுக்கு நம்பிக்கை யில்லை. சரியான பாதையில் விசாரணை செல்வதாக தெரிய வில்லை’ என்றார் சண்முகசுந்தரம்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறும்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் அவர்கள் முதலில் இருந்தே விசாரணை நடத்த வேண்டும். அந்த விசா ரணை முடிய மேலும் 3 மாதம் ஆகும். இதனால் சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் அவகாசம் வழங்கலாம் என்றனர்.
அப்போது சிபிசிஐடி எஸ்.பி. அன்பு கூறும்போது, குற்றவாளி களை நெருங்கிவிட்டோம். விரை வில் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துவிடுவோம் என்ற நம் பிக்கை உள்ளது. எனவே, மேலும் அவகாசம் தர வேண்டும் என்றார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீ ஸாருக்கு 2 மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர், விசாரணை தொடர் பான இடைக்கால அறிக்கையை டிச.18-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி போலீஸாருக்கு நீதி பதிகள் உத்தரவிட்டனர்.