Last Updated : 18 Jan, 2021 07:12 PM

 

Published : 18 Jan 2021 07:12 PM
Last Updated : 18 Jan 2021 07:12 PM

மக்கள் பயன்பாட்டுக்கு வராத ஆன்லைன் ஆர்டிஐ விண்ணப்ப வசதி: விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், அரசுத் துறைகளிடமிருந்து மக்கள் தகவல்களைக் கேட்டுப் பெறவும் கடந்த 2005-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) அமல்படுத்தப்பட்டது.

இதற்காக ஒவ்வொரு அரசுத் துறை அலுவலகத்திலும் ஒரு பொதுத் தகவல் அலுவலர், ஒரு மேல் முறையீட்டு அலுவலர் பொறுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகவல் கோருபவர் பொதுத் தகவல் அலுவலரிடம் மனு செய்யலாம். நாம் அரசுத் துறைகளிடமிருந்து எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு உரிய தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

30 நாட்களுக்குள் பதில் கொடுக்கப்படவில்லை எனில், அதே துறையின் மேல் முறையீட்டு அலுவலருக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். இதற்குக் கட்டணம் இல்லை. முதல் மேல்முறையீடு செய்து 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்கவில்லை என்றாலும், கொடுத்த தகவலில் திருப்தி இல்லை என்று நினைத்தாலும் தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.

இவ்வாறு மனுக்களைத் தபால் மூலம் அனுப்பும்போதும் அதன்பிறகு உத்தரவுகளைப் பெறுவதற்கும் கால விரயம் ஏற்பட்டு வருகிறது.

இதனைத் தவிர்க்க மனுதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, உத்தரவு பெறும் வசதி மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே உள்ளது. இதுதவிர, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதேபோன்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து 2-வது மேல்முறையீட்டு மனுக்களை மட்டும் ஆன்லைனில் அனுப்பும் வசதியை மாநிலத் தகவல் ஆணையம் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்படுத்தியது.

இந்நிலையில், எந்தத் துறையில் இருந்து நாம் தகவல்களைப் பெற விரும்புகிறோமா அந்தத் துறைக்கு நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து தகவல் பெறும் வசதி, நடப்பு நிதியாண்டிலிருந்து படிப்படியாக ஏற்படுத்தப்படும் எனத் தமிழக நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச்17-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து 2020 ஏப்ரல் 29-ம் தேதி இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. அதில், சோதனை அடிப்படையில் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் தகவல் கோரி, வரும் விண்ணப்பங்களை முதலில் https://rtionline.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பெற்று, பின்னர் அனைத்துத் துறைகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 8 மாதங்கள் கடந்தும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு இணையதளம் வரவில்லை. இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “ஆன்லைன் ஆர்டிஐ இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சோதனை ஓட்டம் நிறைவடைந்த பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு இணையதளம் கொண்டுவரப்படும்" என்றனர்.

விரைந்து செயல்படுத்த வேண்டும்

இது தொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறும்போது, “தகவல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், மனுவை தபாலில் அனுப்பி தகவல் பெறுவதில் ஏற்படும் கால தாமதம் காரணமாகவே பலர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதில்லை.

பிஹாரில்கூட ஆன்லைனில் ஆர்டிஐ மனுக்களை அனுப்பும் வசதியை நடைமுறைப்படுத்தி விட்டனர். எனவே, தமிழகத்தில் இந்த நடைமுறையை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தகவல் கோரும் மனுக்களுக்கு உரிய காலத்துக்குள் விரைந்து பதில் அளிக்கவும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x