

சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் மத ஒற்றுமையைப் போற்றும் அந்தோணியார் திருவிழாவைக் காண வந்தோரைப் போட்டி போட்டு கிராம மக்கள் விருந்தளித்து உபசரித்தனர். தொடர்ந்து நடந்த மஞ்சுவிரட்டில் 600 காளைகள் பங்கேற்றன. இதில் மாடு முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர்.
கண்டிப்பட்டியில் ஆண்டுதோறும் தை 5-ம் நாள் அந்தோணியார் திருவிழா, மஞ்சுவிரட்டு நடக்கிறது. நேற்று நடந்த விழாவில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் இணைந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து மெழுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர். மேலும் திருவிழா, மஞ்சுவிரட்டைக் காண வந்த வெளியூர்க்காரர்களை கிராம மக்கள் போட்டி போட்டு கையெடுத்துக் கும்பிட்டு விருந்துக்கு அழைத்தனர்.மேலும், வீடுதோறும் 5 வகை பொரியலோடு உணவளித்து உபசரித்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ”எங்கள் கிராமத்திற்கு வந்தவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காகத்தான் 200 ஆண்டுகளாக விருந்தளிப்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். அந்தோணியாரைக் காவல் தெய்வமாக நினைக்கிறோம். இதனால் எந்த மதத்தினராக இருந்தாலும் எங்கள் ஊரில் பிறக்கும் முதல் குழந்தைக்கு அந்தோணியார் கோயிலில் மொட்டையடித்து, கரும்பில் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வருவர்” என்று கூறினர்.
விருந்து உபசரிப்பு முடிந்ததும் கோயில் காளையை மஞ்சுவிரட்டு தொழுவிற்கு ஊர்வலமாக மேளதாளத்துடன் கிராம மக்கள் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து தொழுவில் இருந்த காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பகல் 2.30 மணிக்கு கோயில் காளையை அவிழ்த்துவிட்டதும் ஒன்றன்பின் ஒன்றாக மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன. மொத்தம் 90 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக கண்மாய் பொட்டல், புன்செய் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடு முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர். இதில் 21 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், 2 பேர் மதுரை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மஞ்சுவிரட்டு பொட்டலில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.