

‘‘தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்க முடியாது’’ என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்றம் சார்பில் நடந்த தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் பேசியதாவது:
”நாங்கள் கூட்டணி வைத்திருக்கும் கட்சி தை 1-ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறது. அதை ஏற்க முடியாது. பருவ காலம் அடிப்படையில் பார்த்தால் சித்திரை 1-ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு.
இதற்காக நான் யாருடன் வேண்டுமானாலும் விவாதம் செய்யத் தயாராக உள்ளேன். கடவுள் இல்லை, பகுத்தறிவு என்று பேசுவோர் கூட தேர்தலில் நல்ல நேரம் பார்த்துதான் வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.
ஏற்கெனவே உள்ள ஆலயங்களைப் புதுப்பித்து தரிசித்தாலே போதும். புதிதாக கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் தேவையில்லை. தனிநபர் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது தேவையில்லாத விஷயம். நாம் சமமான கல்வி, மருத்துவம் வேண்டுமென விவாதம் செய்ய வேண்டுமே தவிர தமிழ்ப் புத்தாண்டை ஏன் சித்திரையில் கொண்டாடுகிறாய்? தையில் ஏன் கொண்டாடுகிறாய்? என்ற விவாதம் செய்வது தேவையில்லாத ஒன்று.
நான் மதச்சார்பின்மை கொள்கை, தமிழர் கலாச்சாரம், மக்களின் நியாயமான கோரிக்கைகளை எந்தவொரு காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்”.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.