Last Updated : 18 Jan, 2021 05:21 PM

 

Published : 18 Jan 2021 05:21 PM
Last Updated : 18 Jan 2021 05:21 PM

ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 219 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 219 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை 32-வது சாலை பாதுகாப்பு மாதமாகக் கடைப்பிடித்திட தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணியை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மேலும், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். விழாவிற்கு காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் முன்னிலை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ.சேக் முகமது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (காரைக்குடி) கே.ஆதப்பன், கோட்ட மேலாளர் கே.நலங்கிள்ளி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆர்.இளங்கோ, வி.ராஜ்குமார், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்கள் தெய்வேந்திரன், தனபால், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:

''18 வயது பூர்த்தியானவர்கள் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதிவேகம், அனுமதிக்கப்பட்ட எடையை விடக் கூடுதல் எடையுடன் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதேபோல, டூவீலர்கள் ஓட்டும்போது தலைக்கவசம் அணிதல், 4 சக்கர வாகனங்கள் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிதல் போன்ற பழக்கங்களை முறையே கடைப்பிடிக்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறும்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்பு போன்றவை நிகழ்கின்றன. 2020ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,022 சாலை விபத்துகள் ஏற்பட்டன. அதில் 206 விபத்துகளில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். 816 விபத்துகளில் 1,113 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்த்து 100 சதவீதம் சாலை விபத்துகள் இல்லாத மாவட்டம் என்ற நிலையினை அடைய காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் சாலை விதிமுறைகளை முறையே பின்பற்றி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்”.

இவ்வாறு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x