

கரோனா தொற்றுப் பரவல், தான் என்ற அகங்காரத்தை அழிக்கக் கற்றுக் கொடுத்துள்ளது எனச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்ஜிப் பானர்ஜி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு முதல் முறையாக இன்று (ஜன.18) வந்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமை நீதிபதிக்குச் சிறப்பாக வரவேற்பு அளிப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சஞ்ஜிப் பானர்ஜி பேசியதாவது:
''நான் வழக்குகளை விசாரித்து முடித்துத் தீர்ப்பு எழுத 3 முதல் 4 வேலை நாட்கள் நேரம் எடுத்துக்கொள்கிறேன். இதற்குத் தீர்ப்பின் மீது வழக்கறிஞர்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே காரணம். 450 பக்கங்கள் கொண்ட தீர்ப்பாக இருந்தாலும் 4 நாட்களுக்குள் எழுதி முடித்துவிடுவேன்.
நாம் ஒரே குழுவாக இருந்து வருகிறோம். தற்போது கரோனாவுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கரோனா தொற்றுப் பரவலால் கடந்த 9 மாதங்களாகப் பணிச்சூழல் மாறிவிட்டது. காணொலிக் காட்சிகள் வழியாகத் தற்போது வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இவ்வாறு நடப்பது என் வாழ்நாளில் இதுவே முதல் முறை.
கரோனா பரவல் தாழ்வை உருவாக்கி, தான் என்ற அகங்காரத்தை அழிக்க நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரு குடிமகனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்துக்கு என்னாலான சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்''.
இவ்வாறு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.கல்யாணசுந்தரம், கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.செல்லபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், அரசு வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.