Published : 18 Jan 2021 05:52 PM
Last Updated : 18 Jan 2021 05:52 PM

சத்துணவு முதல் பாதுகாப்பு வரை: பள்ளிகள் திறந்தவுடன் அரசு, ஆசிரியர்கள், பெற்றோர் செய்ய வேண்டியவை

கண்ணுக்கே தெரியாத சின்னஞ்சிறு கிருமியான கரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. பெருந்தொற்று காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு 10 மாதங்களுக்குப் பிறகு நாளை (ஜனவரி 19) திறக்கப்பட உள்ளது. அரசின் பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு 10, 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் இயங்க உள்ள நிலையில், வழக்கமான கற்பித்தல் செயல்பாடுகளுக்கு முன்பாகச் செய்ய வேண்டியவை என்னென்ன? என்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணரிடம் பேசினோம்.

அரசு என்ன செய்ய வேண்டும்?- தேவநேயன், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்

''முதலில் மாணவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதி என்னும்போது மாணவர்களின் வருகையை வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்க வேண்டும். பள்ளிகளில் தண்ணீர் வசதி உள்ளதா, குழாய்கள், மின் இணைப்புகள் பாதுகாப்பாக உள்ளனவா, கழிப்பறை முறையாக வேலை செய்கிறதா என்பதைக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்குப் பாதுகாப்புடன் வந்து செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள், விடுதி மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கைகள், தர நிர்ணயங்கள் குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்.

பாதுகாப்பு நடைமுறைகளுக்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.500 ஒதுக்கியுள்ளது. இது நிச்சயம் போதாது. தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், முகக்கவசங்களின் விலை என்ன? இதற்காக உடனே மாணவர்களிடம் ரூ.50, ரூ.100 எனப் பணம் கேட்டுவிடக் கூடாது. அதற்குப் பதிலாகப் பள்ளிகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் இணைக்க வேண்டும். அவர்களே மேற்குறிப்பிட்ட 3 சுகாதார உபகரணங்களையும் வழங்க வேண்டும்.

மருத்துவப் பரிசோதனைகளைச் சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். பள்ளியுடன் கிராம சுகாதாரச் செவிலியருக்கு இணைப்பை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்குக் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்போது, உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு சோதனை செய்ய வேண்டும்.

பள்ளிகள் முழுமையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப் பட்டிருக்கின்றனவா என்று அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடிக்கடி வந்து பார்வையிட வேண்டும். முன்னுதாரணப் பள்ளிகளைப் பற்றி நான் பேசவில்லை. எங்கோ தொலைதூர கிராமத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளியிலும் மேற்கூறியவை நடைமுறையில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு மேலிருந்து கீழாக அல்லாமல் விளிம்புநிலைக் குழந்தைகளிடம் இருந்து மேலே வரவேண்டும்.

பாதுகாப்பான மதிய சத்துணவைப் பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும். உள்ளூர் அரசு, தனியார் அமைப்புகளுடன் இணைந்து காலை உணவு கொடுக்கும் சாத்தியங்களை அரசு பரிசீலிக்கலாம். அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்களும் பாடநூல்கள் கருவிகளும் வழங்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாணவர்களின் வருகை கட்டாயமில்லை என்பதால் பள்ளிக்கு வராதவர்களின் கற்றலையும் கண்காணிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தடுப்பூசி குறித்த உண்மையான தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

நிறைவாக, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு என்பதைப் போல இந்தக் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிரதிநிதித்துவத்தை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

தேவநேயன், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்

ஆசிரியரின் கடமைகள் என்னென்ன?

குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்காவது மாணவர்களிடம் பாடங்களைத் தவிர்த்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உரையாட வேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதையே விரும்புவர். அதனால் முன்னதாகவே ஏன் தனிமனித இடைவெளி அவசியம் என்பதை விளக்கலாம். அதேபோலப் பெற்றோர்களிடமும் பேசி, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பாடங்களை அவற்றின் அடிப்படையில் இருந்து தொடங்க வேண்டும்.

கிட்டத்தட்ட 60% அரசுப் பள்ளிக் குழந்தைகள் கரோனா ஊரடங்கால் தொடர் கற்றலை மறந்துவிட்டனர். முதலில் அவர்களை ஆற்றுப்படுத்தி, பயத்தைப் போக்குவதுடன் தன்முனைப்பையும் ஏற்படுத்த வேண்டும். கல்வியின் மீதும் பள்ளிகளின் மீதும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். முன்னதாக இதுகுறித்த புரிதலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தி, அதற்கான பயிற்சிகளை அரசு வழங்க வேண்டும்'' என்றார் தேவநேயன்.

மணிமாறன்- அரசுப் பள்ளி ஆசிரியர், திருவாரூர்

''முதலில் பொதுத்தேர்வு குறித்த அச்சத்தை மாணவர்களிடம் இருந்து போக்க வேண்டும். தேர்வு குறித்த பயத்தை நீக்க, தேதியை விரைவாக அறிவிக்க வேண்டும். கரோனாவால் குறைவான காலத்தில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டியுள்ள சூழலில், பொதுத் தேர்வு உடனே நடைபெறாது என்று அரசு உறுதியளிக்க வேண்டும்.

நீண்ட இடைவெளி காரணமாக மாணவர்களுக்கும் கற்றலுக்குமான தொடர்பு குறைந்திருக்கும். கணித சூத்திரங்களை அவர்கள் மறந்திருக்கலாம். அறிவியல் சமன்பாடுகள் குழப்பலாம். முன்னெப்போதும் இல்லாத வகையில் கற்பித்தல் சார்ந்து ஆசிரியர்களுக்குச் சவால்கள் அதிகம் இருக்கும். அதனால் எளிமையாக, சுவாரசியமாக, மாற்றுக் கற்பித்தல் மூலம் புதுமையாகக் கற்பிக்க வேண்டியது முக்கியம்.

அடுத்ததாகக் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களை, ஆசிரியர்கள் கண்ணியத்துடனும் கனிவுடனும் அணுக வேண்டும். வேலை பார்க்கும்போது அவர்களிடம் ஏற்பட்ட புதிய பழக்கங்கள் குறித்து மனம் விட்டுப் பேச வேண்டும். அவற்றைச் சீராக்க ஆசிரியர்கள் முயல வேண்டும். பள்ளிச் சூழலுக்கு ஏற்ப அவர்கள் மாற, கால அவகாசம் அளிக்க வேண்டும்.

ஆசிரியர் மணிமாறன்

பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து, அந்தந்த கிராமங்களில் பொது அறிவிப்பு வெளியிடலாம். பள்ளி மேலாண்மைக் குழுக்கள், தன்னார்வலர்கள் மூலம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல கரோனாவால் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் அதிக கவனம் கொடுக்க வேண்டும். புதிய பள்ளி, ஆசிரியர்கள், நண்பர்கள் என மாறுபட்ட சூழலில் தங்களைப் பொருத்திக்கொள்ள சிரமப்படுவார்கள் என்பதால், அந்த மாணவர்களின் கற்றலுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்'' என்றார் ஆசிரியர் மணிமாறன்.

உமா மகேஸ்வரி, கணித ஆசிரியர்

''ஆசிரியர்களின் தொடர்ச்சியான உரையாடல் மூலமே மாணவர்களின் கவனச் சிதறலைத் தடுக்க முடியும். '8 மாத இடைவெளிக்கு நீங்கள் காரணமல்ல; இயற்கையாக இயல்பாக நடைபெற்ற ஒன்று. இதனால் அச்சப்படத் தேவையில்லை. பாடத்திட்டம் குறைக்கப்பட்டுவிட்டது. நிச்சயமாகப் படித்துவிடலாம்' என்பதை ஆசிரியர்கள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடவேளைக்கும் முன்பு குறைந்தது 5 நிமிடங்களாவது மாணவர்களிடம் பேசலாம். எல்லாப் பாடங்களிலும் பொதுத் தேர்வில் எதிர்பார்க்கக் கூடிய கேள்விகள் என சில கட்டாயம் இருக்கும். அவற்றை மாணவர்களுக்குத் தவறாமல் கற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் ஆசிரியர்கள் இவற்றுக்குத் தயாராக வேண்டும்’’ என்கிறார் உமா மகேஸ்வரி.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?- கோமதி குணசேகரன், 12-ம் வகுப்பு மாணவரின் தாய்

''நம் குழந்தையின் படிப்பு மட்டும் இப்படியாகிவிட்டதே என்று வருந்தவேண்டாம். படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அதே நேரத்தில் அதன் மீது அச்சத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். பொதுத்தேர்வு முடிவுகள் மட்டுமே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதைக் குழந்தைகளிடம் தெளிவாக உணர்த்தவேண்டும். பள்ளிகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும், இல்லாவிட்டால் ஏற்படும் ஆபத்தையும் விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும்'' என்றார் கோமதி குணசேகரன்.

ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை: பிருந்தா ஜெயராமன்- உளவியலாளர்.

''கரோனாவால் மாணவர்கள் இத்தனை மாதங்களாக ஆன்லைனில் கற்று வந்தனர். இதனால் காலையில் சீக்கிரமே எழுந்து, குளித்துத் தயாராகி, உணவு உண்டு, பயணித்து, பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதேபோல நாள் முழுவதும் தொடர்ந்து கற்றல் செயல்பாடுகளிலும் மாணவர்கள் ஈடுபடவில்லை. ஆனால் பள்ளிகளில் தொடர்ச்சியாகக் கற்பித்தல் நடைபெறும். இதனால் ஆசிரியர்கள் 3 அம்சங்களை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களைப் போல வகுப்பறைகளில் வழக்கமான கற்பித்தலில் ஈடுபடாமல், மாணவர்களின் கவனக் குவிப்பை உறுதிப்படுத்த வேண்டும். கவனச் சிதறலைத் தடுக்க சுவாரசியமான செயல்வழிக் கற்றல் முறைகளையும், மாணவர்களிடம் தொடர்ச்சியாக உரையாடுவதையும் வழக்கமாக்க வேண்டும். காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக வகுப்புகள் என்னும் வழக்கமான நடைமுறைக்கு, ஒழுங்குக்கு மாணவர்களைத் திரும்பக் கொண்டு வரவேண்டும். விடலைப் பருவ மாணவர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதால் கற்றலில் கவனம் குறையலாம். இதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு அவர்களை மென்மையாகக் கற்றலுக்குள் அழைத்து வரவேண்டும்.

பிருந்தா ஜெயராமன்- உளவியலாளர்

கற்றலில் இருந்து வெகுதூரம் விலகிப் போன மாணவர்களை முதலில் உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்குப் பிடித்த பிரபலமானவர்கள் குறித்துப் பேசலாம். கடின உழைப்பு அவர்களை எந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லலாம். வேலைக்குச் செல்லும் மாணவர்கள் (குழந்தைத் தொழிலாளர்கள்) முதலில் பணிக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பெற்றோர், மாணவர்கள் இரு தரப்பினருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பெற்றோர்களைக் குழுவாக அமர வைத்துப் பேச வேண்டும். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?, உங்கள் தொழிலில்/ வேலையில் அடுத்தகட்டம் என்ன? ஊதியம் எவ்வளவு உயரும்? என்பது குறித்துக் கேட்க வேண்டும். இதை உளவியல் மருத்துவர்களோ, ஆசிரியரோ கேட்காமல், சாதாரணப் பின்புலத்தில் இருந்துவந்து கல்வியின் மூலம் இன்று நல்ல நிலையில் இருப்பவரைக் கொண்டும் கேட்க வைக்கலாம். இதன்மூலம் அது மாணவர்களுக்கு அறிவுரையாக இல்லாமல், நிதர்சனமாக இருக்கும். பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்படும்'' என்றார் பிருந்தா ஜெயராமன்.

பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி வழக்கமான சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டி மேற்குறிப்பிட்ட அம்சங்களை அரசும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் தவிர்க்காமல் முன்னெடுப்பதுதான் கரோனாவால் கற்றல் இழப்பைச் சந்தித்திருக்கும் மாணவர் சமுதாயத்துக்கு நாம் செய்யும் நீதியாக இருக்கும்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x