முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்: தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?

முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்: தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?
Updated on
2 min read

முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். 2 நாட்கள் டெல்லியில் தங்கும் அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கிறார். இச்சந்திப்பில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி, தேர்தல் கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதிப் பங்கீடு, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு உள்ளிட்டவை குறித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இவரது பயணத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கும் முதல்வர் பழனிசாமியின் பயணத்தில் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசப்படும் எனத் தெரிகிறது.

அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அதைத் திறந்துவைக்க பிரதமர் மோடியை அழைக்கும் திட்டமும், அத்திக்கடவு - அவிநாசி, கோதாவரி - காவிரி உட்படபல்வேறு நீர்வள திட்டப் பணிகளுக்கு அனுமதியும், அதற்கான நிதியும் கோரப்படும் என்றும் கூறப்படுகிறது.

கரோனா தடுப்புப் பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் சிறப்பு நிதியாக ரூ.9,000 கோடி ஒதுக்கீடுசெய்ய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. சமீபத்தில் நடந்த காணொலிக் காட்சிக் கூட்டத்திலும் பிரதமரிடம் இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால், கரோனா சிறப்பு நிதி இதுவரை கிடைக்கவில்லை.

நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் நிவாரணம் கேட்கப்பட்டது. மத்தியக் குழுவினர் நேரில் வந்து புயல் பாதிப்புகளை பார்வையிட்டுச் சென்ற பிறகும் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், பல்வேறு திட்டங்களுக்காக தமிழக அரசு கோரியுள்ள நிதியை முதல்வர் பழனிசாமி இச்சந்திப்பில் கேட்டுப் பெறுவார் என்று தெரிகிறது.

மற்றொரு புறம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய ஆலோசனை நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக, மத்தியில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு எதிராக பாஜக, பாமக, தேமுதிகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்த அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மத்தியில் உள்ள பாஜக அரசுடன் அதிமுக இணக்கமாக உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதிமுக - பாஜக இடையே உரசல் நிலவி வந்தது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை பாஜகவினர் ஏற்க மறுத்து பேட்டி அளித்து வந்தனர். ரஜினியின் அரசியல் வருகை முக்கியமாகப் பார்க்கப்பட்டது. மறுபுறம் சசிகலாவின் வருகையும் அவர் பொதுச் செயலாளராகத் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டுவார் எனவும் கூறப்பட்ட நிலையில், அதிமுக- பாஜக உறவு குறித்த பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன.

இந்நிலையில் கடந்த வாரம் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரைப் பெரிய கட்சியான அதிமுகதான் முடிவு செய்யும் என அறிவித்தார். ஏற்கெனவே அமித் ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் அதிமுக- பாஜக கூட்டணியில் உள்ளது என ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அறிவித்தனர். ஆனாலும், அமித் ஷா கூட்டணி குறித்துப் பேசாமல் சென்றார். பாஜக தரப்பில் அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கேட்பதாகத் தெரிகிறது.

கூட்டணி, தொகுதிகள் குறித்து மாநிலத் தலைவர்கள் ஆளாளுக்குப் பேசினாலும் இறுதி செய்யும் இடத்தில் இருப்பவர்கள் டெல்லி தலைவர்களே. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா என்பதால், அவருடனான சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்தும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் குறித்தும் பேசப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் முதல்வரின் டெல்லி பயணத்தின் நோக்கம் முக்கியமாக, சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் குறித்தே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in