Published : 18 Jan 2021 12:30 PM
Last Updated : 18 Jan 2021 12:30 PM

கோவை வனக் கோட்டத்தில் 275 வகை பறவைகள், 229 வகை பட்டாம்பூச்சிகள்: ஓராண்டாக நடைபெற்ற கணக்கெடுப்பில் தகவல்

கோவை வனக் கோட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது தென்பட்ட கருங்கொண்டை வல்லூறு. (2-வது படம்) கொண்டை குயில். (3-வது படம்) செந்தலை கூம்பலகன். (கடைசி படம்) 'நீலகிரி டைகர்' வகை பட்டாம்பூச்சி.

கோவை

கோவை வனக் கோட்டத்தில் உள்ள கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனச் சரகங்களில் உள்ள பறவைகள், பட்டாம்பூச்சிகளை அறிந்து கொள்ளும் வகையில், மாவட்ட வன அலுவர் து.வெங்கடேஷ் அறிவுறுத்தலின்படி, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்), கோவை நேச்சர் சொசைட்டி (சிஎன்எஸ்), டபிள்யு.டபிள்யு.எஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கின.

ஜனவரி, மார்ச், ஜூன், அக்டோபர் என 4 கட்டங்களாக இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. ஒவ்வொரு வனச் சரகத்திலும் ஒரு குழு கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டது. இறுதியாக டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பில், மொத்தம் 70 தன்னார்வலர்கள், 43 வனப்பணியாளர்கள் அடங்கிய 15 குழுக்கள் ஈடுபட்டன. இவ்வாறு கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற கணக்கெடுப்பில், கோவை வனக் கோட்டத்தில் மொத்தம் 275 வகை பறவைகள், 229 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிஎன்எஸ் தலைவர் பி.ஆர்.செல்வராஜ், டிஎன்பிஎஸ் தலைவர் அ.பாவேந்தன், டபிள்யு.டபிள்யு.எஃப் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் ஆகியோர் கூறியதாவது:

தொடர் கணக்கெடுப்புகளை நடத்துவதன் மூலம், எந்தெந்த இடங்களில், எந்த வகையான பறவைகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளலாம். கணக்கெடுப்பில் தென்பட்ட பறவைகளில் 45 வகை பறவைகள், குளிர்காலத்தில் இடம்பெயர்ந்து இங்கு வருபவையாகும். அதில், கருங்கொண்டை வல்லூறு (பிளாக் பாசா) என்ற பறவை போளுவாம்பட்டி, காரமடை வனச்சரகங்களில் தென்பட்டது. இவை, வடகிழக்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருந்து இங்கு வருகின்றன. மேட்டுப்பாளையம் வனச் சரகத்தில் தென்பட்ட கொண்டை குயில் (செஸ்ட்நட் விங்டு குக்கூ) என்ற பறவை இமயமலைப் பகுதிகளில் இருந்து வருகின்றன. செந்தலை கூம்பலகன் (ரெட் ஹெட்டட் பன்டிங்) பறவை சிறுமுகையிலும், பழுப்புத் தலை கூம்பலகன் (கிரே நெக்டு பன்டிங்) பறவை கோவை வனச் சரகத்திலும் தென்பட்டுள்ளன. இவை, மேற்கு, மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து வருபவை.

முதல்முறையாக பதிவு

கோவை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 278 பட்டாம்பூச்சி வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், கடந்த ஓராண்டு தொடர் கணக்கெடுப்பின்போது 229 வகை பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டன. காரமடை வனச் சரகத்தில் 'காமன் ஆல்பட்ராஸ்' வகை பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் தென்பட்டன. கோவை வனக் கோட்டத்தில் முதல்முறையாக 'நீலகிரி டைகர்' வகை பட்டாம்பூச்சி சிறுவாணி, மேல்முடி பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அரிதினும் அரிதாக தென்படும் 'ஆட்டம் லீப்'
வகை பட்டாம்பூச்சியும் தென்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x