Published : 18 Jan 2021 12:16 PM
Last Updated : 18 Jan 2021 12:16 PM

நாளை பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆய்வு

சென்னை

நாளை 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிகளில் ஆய்வு நடத்தினார்.

கரோனா தொற்று தமிழகத்தில் பரவியதை அடுத்து கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. பொதுமக்கள் கூடும் அனைத்து செயல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இடையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் உயர் நிலைப்பள்ளி வரையிலான மாணவர்கள் தேர்வுகளுக்கான தேர்ச்சிகள் தேர்வு வைக்கப்படாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளுக்கான தேர்வுகள் மட்டுமே நடந்தது. பள்ளிகள் திறப்பு குறித்து இடையில் கருத்து கேட்கப்பட்டதற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வந்ததை அடுத்து அது தள்ளி வைக்கப்பட்டது.

தொற்று வேகமாக குறைந்து வருவதை அடுத்து பாடங்களை குறைத்து பள்ளிகளை இடைப்பட்ட நாட்களுக்கு திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்புகள் பிப்-19 முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பதற்கு முன் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, கிருமி நாசிகள் வைப்பது, இடைவெளிவிட்டு அமர வைப்பது, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அதுகுறித்து அறிக்கை அளிக்கவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் அதே நேரத்தில் மாணவர்கள் பாடங்களை குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டு பாட வாரியாக குறைக்கப்பட்ட விவரங்களை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது. நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் செய்யப்பட்டுள்ளது.

அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் இன்று பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்போது அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

ஷெனாய் நகரில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தார். மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது. சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, பொதுத்தேர்வு எழுதுவதற்கான மனதளவில் பயிற்சி எடுப்பது குறித்து ஆலோசனை அளிக்கப்படும். மாணவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.வாரம் ஒருமுறை மாணவர்கள் உடல்நிலை பரிசோதனை நடத்தப்படும் என கண்ணப்பன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x