

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழையால் ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள்.விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மல்லி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதேபோல் ராஜபாளையம் பகுதியில் தொடர் மழை காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேவதானம் பகுதியில் கண்மாய் பாசனத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பி வரும் சூழலில் வெளியேற்றப்படும் நீர் வயலில் புகுந்ததால் நெற் பயிர்கள் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட விவசாயி குமரேசன் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து நெல் நடவு செய்தோம். தை மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் தொடர் மழையால் நெற் பயிர்கள் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.