Last Updated : 18 Jan, 2021 12:32 PM

 

Published : 18 Jan 2021 12:32 PM
Last Updated : 18 Jan 2021 12:32 PM

திருவையாறில் பிப்ரவரி 2 -ம் தேதி பஞ்சரத்தின கீர்த்தனை இசைத்து தியாகராஜருக்கு அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 174 வது ஆராதனை விழா வரும் பிப்ரவரி 1-ம் தேதி மாலை தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதி இரவு 9 மணி வரை திருவையாறில் நடைபெற உள்ளது.

ஸ்ரீ தியாகராஜப் பெருமான் சித்தியடைந்த பகுள பஞ்சமி தினமான பிப்ரவரி 2-ம் தேதி தியாகராஜர் ஆராதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழா கரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும். இந்தியாவிலும் மற்றும் உலகம் பூராவிலும் உள்ள சங்கீத வித்வான்களும், இசை கலைஞர்களும் திருவையாறில் நடக்கும் ஆராதனை விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்பது உண்டு.

இந்த வருடம் வித்வான்கள், இசைகலைஞர்கள் , ரசிகர்கள், அங்கத்தினர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்து 200 பேர் மட்டுமே பந்தலில் அமர்ந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

பங்கேற்போர் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருமாறு சபா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பிப்.2ம் தேதி ஆராதனை அன்று மகா அபிஷேகத்தின் போதும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அஞ்சலியை இசைக் கலைஞர்கள் செலுத்துகின்றனர். இந்த வருடம் நடக்கும் 174 வது ஆராதனை விழா பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 5 மணி அளவில் துவங்கி நடைபெறுகிறது. விழாவுக்கு தியாக பிரம்ம சபையின் தலைவரும் எம்பியுமான ஜி கே வாசன் தலைமை வகிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

இந்த விழாவினை முன்னிட்டு இன்று காலை (18ம் தேதி) பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பந்தகால் நடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சபா அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார் , எஸ் கணேசன், எம் ஆர். பஞ்சநதம், பொருளாளர் கணேஷ் , உதவி செயலாளர்கள் டிஆர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் துவக்கமாக பிப். 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்குகிறது, 5 மணி முதல் 5.30 மணி வரை துவக்கவிழா நிகழ்ச்சிகளும், 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது .
இரண்டாம் தேதி காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை ஊஞ்சவிருத்தி பஜனை நிகழ்ச்சியும், எட்டு முப்பது மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து இசைக்கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்த உள்ளனர்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சியும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகளும்
நடை பெறவுள்ளது. இதனிடையே இரவு 7.30 முப்பது மணிக்கு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவம் நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x