

தமிழகத்தில் 2-வது நாளாக நேற்றுகரோனா தடுப்பூசி போடும் பணிநடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இப்பணியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வுசெய்தார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி 16-ம் தேதிதொடங்கியது. தமிழகத்தில் 160 மையங்களில் கோவிஷீல்டும், 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியும் போடப்பட்டது. முதல் நாளில் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்யப்பட்டிருந்த 16 ஆயிரம்பேரில், 2,783 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மற்றவர்கள் வரவில்லை.
சென்னையில் சென்னை அரசுபொது மருத்துவமனை, ஸ்டான்லி,கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நலமருத்துவமனை உட்பட 12 மையங்களில் 568 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
2-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை அரசுமருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். மருத்துவமனை ஆர்எம்ஓ ஆனந்த பிரதாப் உடன் இருந்தார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனும் தடுப்பூசி போட்டுக் கொண்டார். சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 2-வது நாளானநேற்று தமிழகம் முழுவதும் 3,030பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.