Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது: அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது, கட்டுப்பாடுகள் விதிக்க அதிமுக நிர்வாகிகள் குழந்தைகள் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை - குஜராத் மாநிலம் கெவாடியா இடையேயான சிறப்புவிரைவு ரயிலை பிரதமர் மோடி காணொலியில் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

குடும்ப ஆதிக்கம் தலைதூக்கக் கூடாது என்று பாடுபட்டவர் எம்ஜிஆர். அவரது பிறந்த நாளில், புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

சசிகலா சிறையில் இருந்து வருவதால் ஆட்சியிலும், கட்சியிலும், தமிழகத்திலும் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல் கட்சியும், ஆட்சியும் செயல்பட வேண்டும் என்பதுதான் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், மக்களின் விருப்பம்.

அதேநேரம் அவர்கள் ஒரு மாயையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அது ஒரு கானல் நீராகத்தான் இருக்கும். அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியுள்ளார். அமமுகவைநாங்கள் ஒரு கட்சியாகவே பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சசிகலாவை சந்திக்கக் கூடாது என்று யாருக்கும் நாங்கள்தடை போடவில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் குழந்தைகள் அல்ல. கட்சி விரோத நடவடிக்கையில் யாராவது இறங்கினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. அதிமுக உண்மை தொண்டர்கள் யாரும் கட்சியைவிட்டு வெளியேற மாட்டார்கள். மாநில திட்டங்கள் மற்றும் நலன் கருதியே முதல்வர் பழனிசாமி டெல்லி செல்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் பஸ் பாஸ்

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:

மின்சார போக்குவரத்து திட்டம்கைவிடப்படாது. மத்திய அரசு பார்ம் 2 என்ற திட்டத்தை கொண்டுவந்தது. அதில் மின்சார பேருந்துகளுக்கு மானியம் கொடுப்பது தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டிலேயே முதன்முறையாக சி–40 ஒப்பந்தத்தில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி ஜெர்மனியின் கே.எஃப்.டபுள்யூ. வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார போக்குவரத்து, பிஎஸ்6 பேருந்துகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. மீண்டும் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் அத்திட்டம் செயல்படுத்தப்படும். 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x