

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டி காந்தி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடந்தது. வாடிவாசலில் 711 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை சுழற்சி முறையில் தலா 175 வீரர்கள் அடக்கினர். இதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 52 பேர் காயமடைந்தனர்.
திருச்சியைச் சேர்ந்த பிரசாத் என்பவரின் காளை ஒன்று ஜல்லிக்கட்டில் பங்கேற்றது. இவரது நண்பரான அலங்காநல்லூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவரின் தம்பி நவமணி (24) உடன் சென்றார். பிரசாத்தின் காளை வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்டது. காளைகள் வெளியேறும் இடத்தில் கயிறு வீசி அந்த காளையைப் பிடிக்க முயன்றார். அப்போது நவமணியை காளை குத்தியது.
இவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், நேற்று சிகிச்சை பலனின்றி நவமணி இறந்தார்.
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை அருகே உள்ள வடவாளம் ஊராட்சி சேவுகம்பட்டி காளி கோயிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சில ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, காளை முட்டியதில், அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கீழக்காயாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன்(22) படுகாயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.
இதுபோல, இலுப்பூர் பிடாரி அம்மன் கோயிலில் 14-ம் தேதி அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அப்போது, காளை முட்டியதில் சங்கிராம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி(42) காயமடைந்தார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.