

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடுவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக புகார் தெரிவித்து வலசை உள்ளிட்ட பக்கத்து கிராம மக்கள் நேற்று கிராமக் கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் வலசை உள்ளிட்ட பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உள்ளூர் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க, மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தும், காளைகளுக்கான டோக்கன்களை வழங்கவில்லை. இதில் முறைகேடு நடந்தது. டோக்கன் பெற விரும்புவோர் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வாட்ஸ்அப், யூ டியூபில் விளம்பரம் செய்து, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டது. வாடிவாசலில் அவிழ்க்க முடியாத காளைகளுக்கு பரிசு வழங்கவில்லை’ என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வலசை உள்ளிட்ட பக்கத்துக் கிராம மக்கள் நேற்று அங்குள்ள முனியாண்டி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகிலுள்ள கிராம கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வலசை கிராம பொதுமக்கள் சார்பாக ராஜா கருப்பண்ணன், சுவாமிநாதன் ஆகியோர் கூறியதாவது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தாய் கிராமம் பறவை. இக்கிராமத்தில் 3 பேரூராட்சி வார்டுகள் உள்ளன. அலங்காநல்லூர் கிராமத்தில் எந்த ஒரு கோவில் திருவிழா நடத்தினாலும், எங்கள் கிராமத்துக்கு முதல் மரியாதை வழங்கப்படும். எங்கள் கிராமத்தில் வளர்க்கப்படும் சுமார் 25-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் காண முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டன. இதை அவமரியாதையாக கருதுகிறோம். உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கிய தங்கக் காசுகளும் தரம் குறைவானது போன்று ஆய்வில் தெரிகிறது என்றனர்.
குறவன் குலம் கிராமத்தைச் கணேசமூர்த்தி கூறும்போது, ‘‘எனது மகன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 8-க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கினார். இடையில் காயம் ஏற்பட்டதால் களத்திலிருந்து அவர் வெளியேறியதால் சிறந்த வீரருக்கான பரிசு பெறும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும், ஏற்கனவே காளை அடக்கியதற்காக மகனுக்கு வழங்கிய தலா 4 தங்க காசுகளை ஊரிலுள்ள நகைக்கடை ஒன்றில் ஆய்வு செய்தோம். செம்பு, இரும்பு கலந்த தரம் குறைந்த தங்க காசுகள் என நகைக் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
உயிரைப் பணயம் வைத்து காளைகளை அடக்கும் பாரம்பரிய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் தங்ககாசுகள் தரமற்றது என்பது வருத்தமளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பரிசு பொருள் முறைகேடு புகார் தொடர்பாக கிராமக் கமிட்டித் தலைவர் சுந்தரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
எங்களது ஊர் காளைக்கு முன்னுரிமை இல்லை என, வலசை உள்ளிட்ட கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். அலங்காநல்லூர் கேட் அருகே உள்ளூர் காளைகளை வாடிவாசலுக்கு அழைத்துச் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை போன்ற சில நிறை, குறைகளை அவர்கள் கூறினர்.
முதல்வர் வருகைக்கான ஏற்பாட்டால் அவசரத்தில் சில குறைகள் நடந்திருக்கலாம். அதை பெரிது படுத்தவேண்டாம் என சமாதானம் செய்துவிட்டோம். ஜல்லிக்கட்டில் வழங்கிய தங்க காசுகள் தரம் குறைந்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு. அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்தாண்டு உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற எல்லா குறைகளும் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.