

ஆம்பூர் அருகே தறிக்கெட்டு ஓடிய சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த தேநீர் கடைக்குள் புகுந்த தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் வேண்டா(48). இவர் அதேபகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேண்டா தேநீர் கடையில் இருந்தார். அப்போது, ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கிச்சென்ற சரக்கு வாகனம் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிக்கெட்டு ஓடி அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் மற்றும் மிதிவண்டியில் சென்றவர்கள் மீது மோதியது. பின்னர், திடீரென தேநீர் கடைக்குள் புகுந்தது.
இதில், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் இளங்கோவன் (43), தேநீர் கடை உரிமையாளர் வேண்டா (48), கடையில் இருந்த கணேசன் (20), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜோசப் (39), இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்த மகேஷ்பாபு (34), அவரது மகன் மணிமாறன் (7), மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்ற கோகுல் (18), தினேஷ் (16), மிதிவண்டியில் சென்ற பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (50) ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர்.
உடனே, அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுப்பிரமணியும், மகேஷ்பாபு மகன் மணிமாறனும் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.