

பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்களும் நடிகர்களுமான கரு.பழனியப்பன், போஸ் வெங்கட் ஆகியோருக்கு `பெரியார் விருது' வழங்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்த விருதுகளை வழங்கினார்.
பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள், பொங்கல் விழா, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா, பெரியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழர் தொல்லியலும், நீர் மேலாண்மையும் கண்காட்சியை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்.
விருது வழங்கும் விழாவுக்கு பெரியார் முத்தமிழ் மன்ற தலைவர் த.க.நடராசன் தலைமை தாங்கினார். செயலாளர் மாவட்ட முன்னாள் நீதிபதி இரா.பரஞ்சோதி வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.
திரைத்துறையில் தொடங்கி சமூகத் துறையிலும் பொதுத்தளத்திலும் முற்போக்குச் சிந்தனைகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பவர்கள் வரிசையில் இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் ஆகியோருக்கு பெரியார் விருதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
விருது பெற்றவர்கள் ஏற்புரை ஆற்றினர். மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.