

‘நின்ற நிலையில் ஒருவர் கம்பு சுழற்றினால்’ அது சிலம்பம், ‘கம்பு நிற்க, அதனை ஒருவர் உடலால் சுழன்றால்’ அது மல்லர் கம்பம். மன்னர்கள் காலத்தில், போர் களத்தில் ஈடுபடும் வீரர்கள், தங்களது உடலை வலிமைப்படுத்த, விளையாட்டாக பழகி பயிற்சி பெற்ற கலைதான் மல்லர் கம்பம். மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தும் கலை. சோழர் மற்றும் பல்லவ மன்னர்கள் காலத்தில் மல்லர் கம்பம் விளையாட்டில், அவர் களது போர் வீரர்கள் மிகுந்த திறமைசாலிகளாக திகழ்ந்தனர்.
தமிழகத்தில் மண்ணோடும் மக்களோடும் வேரூன்றி இணைந்திருந்த மல்லர் கம்பம், முகாலயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் படை யெடுப்புக்கு பிறகு மண்ணையும் மக்களையும் விட்டு விலகி சென்றது. இதன் சுவாசத்தை அறிந்திருந்த மராட்டியர்கள், மல்லர் கம்பத்துக்கு முக்கி யத்துவம் கொடுத்து, பட்டித் தொட்டிகளில் எல்லாம் மல்லர் கம்ப விளையாட்டைக் கொண்டு சேர்த்தனர். இப்படியாக, மராட்டிய மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் மல்லர் கம்பம் விளையாட்டு உயிர்துடிப்பாக திகழ்கிறது என்கின்றனர் மல்லர் கம்ப வீரர்கள்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “மராட்டிய மாநிலத்தில் மல்லர் கம்பம் புகழ் பெற்று திகழ்கிறது. மல்லர் கம்பத்தை, அந்த மாநில அரசு அங்கீகரித்துள்ளது. பள்ளிகளில் இறைவழிபாடு முடிந்த பிறகு சுமார் 5 நிமிடம் மல்லர் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபடுவார்கள். தாய்மடியான தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாக, மக்களை சென்றடைந்து வருகிறது மல்லர் கம்பம். இதற்கு, மிக முக்கிய காரணம், தமிழ்நாடு மல்லர் கம்ப கழக நிறுவனரான எங்கள் ஆசான் உலகதுரை.
தமிழகத்தில் கடந்த 40 ஆண்டு களுக்கு முன்பு மல்லர் கம்பம் பயிற்சி வகுப்பை தொடங்கினார். திருவண்ணாமலையில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறும் மல்லர் கம்பம் பயிற்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மல்லர் கம்பத்துக்கு அடிப் படையாக ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளிக்கப் படுகிறது. அதில் பயிற்சி பெற்றவர்கள், மல்லர் பயிற்சியில் ஈடுபடுவர்.
மல்லர் கம்பம் தற்போது பல்வேறு வடிவங்களை பெற் றுள்ளன. மாணவிகளுக்கான ரோப் மால்கம், மாணவர்களுக்கான தொங்கு மால்கம் மற்றும் இரு பாலருக்கான பேபரிக் என விரிவடைந்துள்ளன. இந்தியா மட்டும் இல்லாமல் பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் ‘மல்லர் கம்பம்’ பிரபலமடைந்துள்ளது.
தமிழகத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மூலம் நடத்தப்படும் போட்டிகளில் மல்லர் கம்பம் விளையாட்டை இணைத் துள்ளதன் மூலம் புத்துயிர் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மல்லர் கம்பம் பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களை வழங்கி, தமிழக அரசு இடம் ஒதுக்கி கொடுத்தால் இளைஞர்களின் திறமை வெளிச்சத்துக்கு வரும்” என்றனர்.