Last Updated : 17 Jan, 2021 07:03 PM

 

Published : 17 Jan 2021 07:03 PM
Last Updated : 17 Jan 2021 07:03 PM

டெல்டா விவசாயிகள் புது முயற்சி: நெல் ஈரப்பதத்தை உலர்த்த நவீன இயந்திரம் வரவழைப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பொன்னாப்பூரில் நெல் உலர்த்தும் இயந்திரம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.

தஞ்சாவூர்

ஈரப்பதமாக உள்ள நெல்லை உலர்த்தி விற்பனை செய்யும் இயந்திரத்தை விவசாயிகள் டெல்டா மாவட்டத்துக்கு முதன்முறையாகக் கொண்டு வந்து உலர்த்தும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறுவை, சம்பா நெல் அறுவடை செய்யும்போது பருவ மழையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் பருவம் தவறிப் பெய்யும் மழையின் காரணமாக நெல் அறுவடை செய்யும்போது மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகமாக நெல் மணிகள் வீணாகி, விற்பனை செய்ய விவசாயிகள் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

நெல் அறுவடைக் காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்திலிருந்து உயர்த்திக் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுப்பதும், அவ்வப்போது அரசு ஈரப்பதத்தின் அளவைத் தளர்த்திக் கொள்கை முடிவை அறிவிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிவர், புரெவி புயலின்போது அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள், மழை நீரில் மூழ்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

இதனால் அறுவடை செய்த நெல்லிலும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறிக் கொள்முதல் செய்யாமல், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கின.

இதையடுத்து விவசாயிகளே நெல் உலர்த்தும் இயந்திரத்தை ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து வடிவமைத்துப் பெற்று, சோதனை முயற்சிக்காகத் தஞ்சாவூருக்கு வரவழைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூரில் உள்ள கொள்முதல் நிலையத்தில் இன்று (17-ம் தேதி), நெல் உலர்த்தும் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டு சோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளனர்.

நெல் உலர்த்தும் இயந்திரத்தின் படம்.

இதுகுறித்து முன்னோடி விவசாயியான கணபதி அக்ரஹாரம் சீனிவாசன் கூறும்போது, ’’அறுவடைக் காலங்களில் நெல் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருக்கும் சூழல் காலங்காலமாக இருந்து வருகிறது.

இதனைப் போக்க ஏதாவது வழி கிடைக்குமா என இணையதளத்தில் தேடினேன். அப்போது மணிலா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் "மொபைல் கிரைன் ட்ரையர்" என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுவதை அறிந்தேன்.

பின்னர் இது தொடர்பாக ஓசூர், வேலூர் ஆகிய பகுதிகளில் வேளாண் இயந்திரங்களை வடிவமைக்கும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு மொபைல் கிரைன் ட்ரையர் இயந்திரம் தொடர்பாகக் கூறினேன். அவர்களும் இதனை வடிமைத்துத் தந்துள்ளனர். இந்த இயந்திரம் ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் 1 மணி நேரத்தில் 4 டன் நெல்லை உலர்த்தி, தூசியை அகற்றிவிடும். இந்த இயந்திரம் தற்போது பொன்னாப்பூரில் சோதனை முயற்சியில் இயக்கப்படுகிறது.

ஒரு வார காலத்துக்கு இயந்திரத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இந்த இயந்திரம் வெற்றிகரமாக இயங்கினால், தமிழக அரசே அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் இந்த இயந்திரத்தை நிறுவி நெல்லை உலர்த்தியும், தூசி இல்லாமல் சுத்தம் செய்தும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இந்த இயந்திரத்தை டிராக்டர் இன்ஜினில் பொருத்திச் சுலபமாகக் கொண்டு செல்லவும் முடியும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x