தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் 

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் 
Updated on
1 min read

தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் என்றும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று (ஜனவரி 16) தொடங்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதற்கட்டமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி குறித்த பயம் இன்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தயாரான கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு கரோனா தடுப்பூசிகளும் நம்பகத்தன்மை வாய்ந்தது என்றும் தடுப்பூசி குறித்த தவறான பிரச்சாரங்களையும், அச்சத்தையும் கைவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்தியாவில் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் அவசியத்தைப் பொது மக்கள் உணர வேண்டும்.

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பிரேசில், வங்க தேசம், ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்க இருக்கிறது. தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன். தடுப்பூசிகள் பாதுகாப்பானதுதான் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்''.

இவ்வாறு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in