

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருவதாகத் தமாகா மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா பங்கேற்றார். முன்னதாக உதகை ஏடிசி சுதந்திர திடலில் மறைந்த தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமாகா இளைஞரணி சார்பில் 11 மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் தமாகா கூட்டணி தொடரும். எடப்பாடி பழனிசாமி அரசு, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
அதிமுக அரசு இந்த நான்கு ஆண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைத்தும், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியும், 200-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தி, 4000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளைத் தூர் வாரி உள்ளது. நீர் மேலாண்மையில் தமிழக அரசு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
மேலும், கரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் மின் வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு இல்லை. கரோனா காலத்தில் தமிழக அரசு மட்டுமே மக்களுக்கு ரூ.2500 நிதி வழங்கியது.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அரசியல் லாபத்துக்காக தினமும் ஒரு அறிவிப்பு மற்றும் போராட்டத்தை நடத்துகின்றன. திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டங்கள் நாடகம். 2006-ம் ஆண்டு முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். மின் வெட்டு, நில அபகரிப்பு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால், வரும் தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும். திமுக தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஸ்டாலின் சகோதரர் அழகிரியே ஸ்டாலின் மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாது என்கிறார்.
அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சி செய்ததால் சில அதிருப்தி இருந்தாலும், திமுக மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளது. சசிகலா சிறையிலிருந்து வந்த பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்படாது. அவரால் ஆட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. மேலும், அவர் அரசியலில் ஈடுபட மாட்டார் எனத் தெரிகிறது. தமாகா வெற்றி பெறும் தொகுதிகளை அதிமுகவிடம் பெற்றுத் தேர்தலில் போட்டியிடும்’’.
இவ்வாறு யுவராஜா தெரிவித்தார்.