Published : 03 Oct 2015 07:51 AM
Last Updated : 03 Oct 2015 07:51 AM

ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழு தீர்மானம்: இலங்கை தமிழர்களுக்கு பயனளிக்காது - முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கடந்த 1-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவ தாக இருக்காது. இது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கடந்த 1-ம் தேதி இலங்கையில் இணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமை ஆகியவை குறித்த ஒரு தீர்மானம் வாக்கெடுப்பு எதுவுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் மிகுந்த ஏமாற்றத் தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் மீது சர்வதேச விசாரணை நடத்தும் வகையில் வலுவான தீர்மானத்தை இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும். இலங்கைக்கு ஆதரவான நிலையை அமெரிக்கா எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக கடந்த மாதம் 16-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங் கையே போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்ற வகையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடிய சூழல் உள்ளது என்பதையும், அதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்திய பேரரசுக்கு உள்ளது என்பதையும் நான் தெளிவாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன்.

தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டு பிரதமருக்கு கடந்த மாதம் 16-ம் தேதியன்றே ஒரு கடிதமும் எழுதினேன். அதனுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தின் நகலையும் அனுப்பியிருந்தேன். எனினும், மத்திய அரசு இது தொடர்பாக எவ்வித நேர்மறை நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளால் கொண்டு வரப்பட்டு, கடந்த 1-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக அமையாது. இது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ள தீர்மானம்தான்.

இலங்கை அரசிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதி நிறைவேற் றப்பட்டுள்ள இந்த வலுவற்ற தீர்மானம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எவ்வித நன்மையையும் பயக்காது.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x