

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 6485 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் நேற்று காலையில் திறந்துவிடப்பட்டிருந்தது. தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்: பாபநாசம்- 10, சேர்வலாறு- 13, மணிமுத்தாறு- 15, கொடுமுடியாறு- 1, அம்பாசமுத்திரம்- 20, சேரன்மகாதேவி- 12, நாங்குநேரி- 4, ராதாபுரம்- 2, பாளையங்கோட்டை- 5, திருநெல்வேலி- 2.20.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலையில் 142.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4325.57 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.49 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 2710.75 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாபநாசம் அணையிலிருந்து வினாடிக்கு 4330.86 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 2155.30 கனஅடியுமாக மொத்தம் 6485 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டிருந்தது.
49 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை நிரம்பியிருக்கிறது. இதனால் அணைக்கு வந்து கொண்டிருந்த 554 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இதுபோல் 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணையும் முழுகொள்ளளவை எட்டியிருக்கிறது.
இதனால் அணைக்குவரும் 101 கனஅடி தண்ணீர் திறன்துவிடப்பட்டுள்ளது. 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 39 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 60 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு இன்று குறைக்கப்பட்டதை அடுத்து ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபம் வெளியே தெரியும் அளவுக்கு தண்ணீர் வரத்து குறைந்திருக்கிறது. இதுபோல் மேலப்பாளையம்- டவுன் வழித்தடத்தில் ஆற்றின் குறுக்கேயுள்ள கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தில் கடந்த சில நாட்களாக வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளதை அடுத்து போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கியிருக்கிறது.